பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டிய பாகிஸ்தான் அரசு, இந்தியத் துணைத் தூதரை அழைத்து நேற்று கண்டனம் தெரிவித்தது.
கடந்த ஒரு மாதத்தில் 60-க்கும் மேற்பட்ட முறை எல்லைதாண்டிய தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியுள்ள நிலையில், இந்திய தூதரை கடந்த ஒரு வாரத்துக்குள் 5-வது முறையாக அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தின் நேற்று முன்தினம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 6 பேர் பலியானார்கள், 8 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இந்திய துணைத்தூதர் ஜே.பி.சிங்கை நேற்று நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு நேற்று கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ பாகிஸ்தான் எல்லையான நிகைல், ஜன்டிராட் ஆகிய எல்லைப் பகுதியில் கடந்த 31-ந் தேதி இந்திய ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இதற்காக, தெற்கு ஆசிய மற்றும் சார்க் அமைப்பின் இயக்குநர் முகமது பைசல் இந்தியத் துணைத்தூதர் ஜே.பி. சிங்கை நேரில் அழைத்து கண்டித்தார்.
மேலும், 2003-ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய தரப்பினர் மதிக்க வேண்டும் என்றும் எல்லை மீறி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. எல்லை ஓர கிராமங்களில் வசிக்கும் மக்களின் அமைதிக்கும், உயிரிக்கும் குந்தகம் விளைவிக்காமல் இருக்க தாக்குதலை நிறுத்த வேண்டும்'' என்றும் கூறப்பட்டது.
இதற்கு இந்திய தூதர் ஜே.பி. சிங் தனது பதில்லி, பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவுல்கள் இருப்பதால் அதைத்தடுக்கவே இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிசூடு நடத்துகிறார்கள் என்று விளக்கம் அளித்தார்.
இந்த ஒரு வாரத்துக்குள் இந்திய துணைத்தூதரை அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டிப்பது இது 5-வது முறையாகும். இதற்கு முன், கடந்த மாதம் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
