பலுசிஸ்தானில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயிலைக் கடத்தினர். பாதுகாப்புப் படையினர் 155 பணயக்கைதிகளை மீட்டனர்; 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் விடுதலைப் படை இதற்குப் பொறுப்பேற்றது.

பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலை ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் கடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அவர்களிடம் சிக்கியிருந்த 150க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சியாளர்களுடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் 155 பணயக்கைதிகளை மீட்டனர். பெண்கள், குழந்தைகள் உட்பட மீட்கப்பட்ட பயணிகள் அருகிலுள்ள மாக் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

பலூசிஸ்தான் விடுதலைப் படை அமைப்பின் கிளர்ச்சியாளர்களுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை இரவு முழுவதும் தொடர்ந்தது. ஜாஃபர் எக்ஸ்பிரஸில் எத்தனை பணயக்கைதிகள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பலுசிஸ்தான் விடுதலைப் படை தங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மறுத்துள்ளது. 30 பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்றதாகவும் கூறியுள்ளது. ஆனால் இதை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

கிளர்ச்சியாளர்களின் ஒரு குழு சில பணயக்கைதிகளை மலைகளுக்குள் அழைத்துச் சென்றதாகவும் மீதமுள்ளவர்களை ரயிலிலேயே வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இருட்டில் தப்பிக்க முயல்வதற்காக பயணிகள் சிறு குழுக்களாகப் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் பாதுகாப்புப் படையினருக்கு மீட்பு நடவடிக்கைக்கு சிரமமாக இருந்துள்ளது.

குவெட்டாவிலிருந்து பெஷாவர் செல்லும் வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு சுரங்கப்பாதையில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைத் தடுத்து நிறுத்தினர். ரயிலின் 9 பெட்டிகளில் குறைந்தது 400 பயணிகள் இருந்துள்ளனர். ஒரு மாத காலம் ரயில் போக்குவரத்து இடைநிறுத்தத்துக்குப் பிறகு இந்த பாதை மீண்டும் இயக்கப்பட்டது.

பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலைப் படை இந்தக் கடத்தலை நடத்தியதாகப் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் தண்டவாளங்களை வெடி வைத்துத் தகர்த்து சுரங்கப்பாதையில் ரயிலை நிறுத்தச் செய்தனர் என்றும் ரயில் என்ஜின் ஓட்டுநரையும் கொன்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

பலூச் அரசியல் கைதிகள் மற்றும் ராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போனவர்களை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று பலுசிஸ்தான் விடுதலைப் படை கோரியது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ரயிலை முற்றிலும் அழித்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர். ராணுவ நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக 10 பணயக்கைதிகளை தூக்கிலிடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்களுக்கு உதவ பெஷாவர் மற்றும் குவெட்டா ரயில் நிலையங்களில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரம்ஜான் நோன்பு மாதத்தில் நடந்த இந்த ரயில் கடத்தல் கோழைத்தனமான தாக்குதல் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டித்துள்ளார். "நாட்டிலிருந்து பயங்கரவாதம் என்ற அரக்கனை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம். பாகிஸ்தானில் அமைதியின்மை மற்றும் குழப்பத்தை பரப்பும் ஒவ்வொரு சதியையும் நாங்கள் முறியடிப்போம்" என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தானில் கடந்த சில மாதங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ளது. கடந்த நவம்பரில், குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டனர், 62 பேர் காயமடைந்தனர்.