எங்கள் நாட்டில் இருந்து 57,800 முறை ஆப்கானை தாக்கி இருக்கிறீர்கள்....அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ‘பளார் பதிலடி’ கொடுத்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் இதுவரை ஒன்றும் செய்தது இல்லை என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பதிலடி கொடுத்துள்ளார்.
“எங்கள் நாட்டைப் பயன்படுத்தி, 57 ஆயிரத்து 800 முறை ஆப்கானிஸ்தானை தாக்கி இருக்கிறீர்கள். உங்களால் பல உயிர்களை இழந்துள்ளோம்’’ என்று கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் நாடாக இருந்து வருகிறது. கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து இருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் ஏமாற்றத்தையும், பொய்களையுமே பரிசாக அளித்தது. அந்த நாட்டுக்கு நிதியுதவியை நிறுத்துகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 1-ந்தேதி குற்றம் சாட்டி இருந்தார்.
பாக். பதிலடி
இதற்கு பதில் அளித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் டுவிட்டரில்நேற்று பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது-
வெற்றுவார்த்தை
அமெரிக்கா கூறுவது போல் கடந்த 15 ஆண்டுகளில் எங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி கொடுத்தது என்பது துல்லியமானது அல்ல, அது வெறும் வெற்றுவார்த்தை. பாகிஸ்தான் ஒருபோதும் தன்னுடைய இடத்தில் தீவிரவாத செயல்கள் நடக்க அனுமதிக்காது. எந்த பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கவே விரும்புகிறது, தயாராகவும் இருக்கிறது.
பழிசுமத்தக்கூடாது
பாகிஸ்தான் உங்களுக்கான போதுமான அளவு செய்து இருக்கிறது. அமெரிக்கா தங்களின் தோல்வி அடைந்த கொள்கைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் எங்கள் மீது பழிசுமத்தக்கூடாது. நாங்கள் என்ன செய்து இருக்கிறோம் என்று கேட்டீர்கள்?.
57,800 முறை
உங்களின் ஒரு தொலைபேசி அழைப்பில் எங்களின் சர்வாதிகாரி சரண் அடைந்தார். உங்களால் எங்கள் நாடு ரத்தக்களரியானது. எங்கள் நாட்டில் இருந்து, எங்களைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான் மீது 57 ஆயிரத்து 800 முறை தாக்குதல் நடத்தி இருக்கிறீர்கள்.
அப்பாவி மக்கள் பலி
எங்கள் மண்ணில் இருந்துதான், உங்கள் படைகளுக்காக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் சப்ளை செய்தீர்கள். நீங்கள் தொடுத்த போரின் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்களும், வீரர்களும் பலியானார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.