பங்காளி பாகிஸ்தானுக்கு கைகொடுக்கும் சீனா... இந்தியாவுக்கு போட்டியாக இப்படியொரு திட்டமா..?
சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியதை அடுத்து பாகிஸ்தான் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்து 2022-ல் முதன் முறையாக மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சௌத்ரி ஃபவாத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ‘’விண்வெளி வீரருக்கான தேர்வு 2020ம் ஆண்டு தொடங்கும். முதலில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 25 பேராக குறைக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார். விண்வெளி வீரரை தேர்ந்தெடுப்பதில் பாகிஸ்தான் விமானப்படை முக்கிய பங்காற்றும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால் மேலும் பல நன்மைகள் ஏற்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, சீன ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதையில் பாகிஸ்தான் செலுத்தியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியதை அடுத்து பாகிஸ்தான் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.