பாகிஸ்தானில் இம்ரான் கான் தகுதிநீக்கம்! முன்கூட்டியே ஆட்சியைக் கலைக்கும் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்!
மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அந்நாட்டுச் சட்டப்படி இம்ரான் கான் இன்னும் 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷ்கானா வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அவரைத் தகுதிநீக்கம் செய்து, 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தோஷ்கானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபாரதத்தொகையைச் செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானை விரைவில் கைது செய்து சிறை அடைக்கவும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கான் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அந்நாட்டுச் சட்டப்படி இம்ரான் கான் இன்னும் 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கூகுளில் தப்பு தப்பா தேடாதீங்க... உதவி செய்ய வரும் 'கிராமர் செக்' வசதி! பயன்படுத்துவது எப்படி?
இதனிடையே, செஷன்ஸ் நிதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (புதன்கிழமை) இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
தோஷ்கானா வழக்கு:
பாகிஸ்தானில் 1974 இல் நிறுவப்பட்ட தோஷ்கானா களஞ்சியம் உருவாக்கப்பட்டது. அரசு உயர் அதிகாரிகள் பணியில் இருக்கும்போது பெறும் பரிசுகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை இந்தக் களஞ்சியத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயம். அவை தோஷ்கானா மூலம் விற்பனை செய்யும்.
இதிலிருந்து அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமருக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் 30,000 பாகிஸ்தான் ரூபாய்க்குக் குறைவான மதிப்புள்ள பரிசுகளை மட்டுமே தாங்கள் வைத்துக்கொள்ள முடியும். இந்த வரம்புக்கு மேல் கிடைக்கும் பரிசுகளுக்கு அவற்றின் மதிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகிதத்தை தோஷ்கானாவுக்குச் செலுத்த வேண்டும் அல்லது அவற்றை தோஷகானாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆகஸ்ட் 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் வெளிநாட்டு பயணங்களில் அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களில் பலவற்றை அரசின் தோஷ்கானா என்ற களஞ்சியத்தில் ஒப்படைக்காமல் தாமே வைத்துக்கொண்டதாக சிலவற்றை விற்பனை செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே அந்நாட்டின் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் விசாரணை நடத்த முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நிலையில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கலைப்பு:
2022 ஏப்ரலில் இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழ்ந்து, ஷெபாஷ் ஷெரீப் பிரதமர் ஆனார். இந்நிலையில், இப்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்குமாறு பிரதமர் ஷெரீப் அதிபருக்கு பரிந்துரைக் கடிதம் அளித்துள்ளார். இதனால், விரைவில் அந்நாட்டு அரசு கலைக்கப்பட்டு காபந்து அரசு பொறுப்பேற்க உள்ளது.
பாகிஸ்தான் சட்டப்படி ஆட்சிக்காலம் முழுமையாக முடிந்து தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தல் நடந்த 60 நாட்கள் காலக்கெடுவுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், முன்கூட்டியே ஆட்சி கலைக்கப்பட்டால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இதனால், ஆட்சிக்காலத்தை நீட்டிக்கவே ஷெபாஷ் ஷெரீப் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் பொதுத்தேர்தலை புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடத்தவேண்டும் என்று கோரிக்கை உள்ளதால், தேர்தல் நடத்த 90 நாட்களுக்கும் மேல் கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
தக்காளி திருட்டைத் தடுக்க வித்தியாசமான ஐடியா! வயலில் சிசிடிவி கேமரா பொருத்திய ஹைடெக் விவசாயி!