இந்தியா மீது பயங்கர தாக்குதல் நடத்தவே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு மறைமுகமாக விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடந்த புல்வாமா தாக்குதல் மற்றும் பதான்கோட் தாக்குதல் ஆகியவற்றில் மூளையாக செயல்பட்டவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார். இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியதால் இவரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.சபை அறிவித்தது. இதனையடுத்து, பல்வேறு நெருக்கடியின் காரணமாக பாகிஸ்தான் அரசு மசூத் அசார் சொத்துகளை முடக்கி கைது செய்தது. 

இதனிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்நிலையில், தாக்குதல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தீவிரவாதி மசூத் அசார் களமிறக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக, பாகிஸ்தான் சிறையில் உள்ள மசூத் அசாரை, அந்நாட்டு அரசு ரகசியமாக விடுவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் செயலை தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதி பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.