பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான் இல்லத்தில் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இம்ரான்கான்  கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவாரா என்ற கேள்வி அந்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது . இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது .  இதுவரை அந்நாட்டில் சுமார் 43   ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்க 939 ஆக உயர்ந்துள்ளது .  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவுக்கு இணையாக பாகிஸ்தானில் கொரோனா வேகம் எடுத்து வருவதால் அங்கு  ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது .  பெரும்பாலும் பாகிஸ்தானில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் என்பதால் தொடர் ஊரடங்கால் அந்நாட்டு மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .

 

ஏராளமான அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர் .   ஒருபக்கம் நோய்த்தாக்கம் மற்றொரு பக்கம் வறுமை பொருளாதார நெருக்கடி என கடுமையான பாதிப்புக்கு பாகிஸ்தான் ஆளாகியுள்ள நிலையில்  பிரதமர் இம்ரான் கான் , பசி பட்டினியோடு இன்னும் எத்தனை நாட்களுக்கு வீடுகளில் மக்கள் அடைபட்டு கிடப்பது ,  கொரோனாவுடன்  மக்கள் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என தன் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் . இந்நிலையில் அவரது இல்லத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து வீட்டிலுள்ள மற்ற பணியாளர்களும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ,  பிரதமர் நிவாரண நிதி பெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி எதி பவுண்டேஷன் நிறுவனர்  பைசல் எதி என்பவர் இம்ரான் கானை சந்தித்து 10 மில்லியன் பணத்தை வழங்கினார் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமரின் வீட்டில் காசோலை வழங்கப்பட்டது ,  அப்போது பிரதமர் இம்ரான் மற்றும் பைசல் ஆகிய இருவருமே முகக்கவசமோ அல்லது கையுறையோ அணியவில்லை , 

அதன் பின்னர் எதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .  இதனையடுத்து பைசலை சந்தித்த  இம்ரான் கானுக்கும் கொரோனா இருக்கக் கூடும் என்ற  சந்தேகத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  பின்னர் அவருக்கு வைராஸ் தொற்று இல்லை என தெரியவந்த நிலையில்,    மீண்டும் பிரதமர் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டிருப்பது பிரதமர் இம்ரான்கானுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடுமே என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது .  இந்நிலையில்  அவரது வீடு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருவதுடன் . பிரதமர் இல்லத்தில் ஒவ்வொரு முக்கியமான தளத்திலும் பணியாளர்களும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக பிரதமர் இம்ரான் கானின் ஆலோசகர் ஷாபாஸ் கில் தெரிவித்துள்ளார்.