பாகிஸ்தானில் இந்து மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு... நீதி விசாரணைக்கு உத்தரவு..!
சாந்தினி தற்கொலை செய்யவில்லை என்று அவரது பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இவரது மரணத்தின் உண்மையை கண்டறிந்து, குற்றவாளிக்கு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானில் இந்து மாணவி கழுத்து நெறிக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் கோட்கி டவுன் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தவர் நம்ரிதா சந்தனி. இவர் லர்கானா மாவட்டத்தில் உள்ள பிபி ஆஸிபா பல் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது விடுதி அறையில் கதவு வெளியே மூடப்பட்டிருந்த நிலையில் கழுத்தில் துணியால் இறுக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். கல்லூரி நிர்வாகமும், போலீஸாரும் மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், மாணவியின் உறவினர்கள் இது கொலைதான் எனக் கூறி வருகின்றனர்.
இதனையத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை நேரத்தில் நம்ரிதாவின் சகோதரர் உடனிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில் வயரால் இறுக்கப்பட்டது போல கழுத்தைச் சுற்றி தடயம் உள்ளது. ஆனால் துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம் இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நம்ரிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சிந்து மாகாண அரசு அப்பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இதுகுறித்து மாகாண அதிகாரி அஜீஸ் அலி பட்டி என்பவர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சாந்தினி தற்கொலை செய்யவில்லை என்று அவரது பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இவரது மரணத்தின் உண்மையை கண்டறிந்து, குற்றவாளிக்கு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.