Imran Khan Arrested: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது; இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கடத்தப்பட்டதாகவும், ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பிடிஐ கட்சியின் துணைத் தலைவர் ஃபவாத் சவுத்ரி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களால், அடையாளம் தெரியாத இடத்திற்கு இம்ரான் கான் கடத்தப்பட்டு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி, ''உள்துறை மற்றும் போலீஸ் ஐஜி இருவரும் 15 நிமிடங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும் டுவிட்டரில் குறிப்பிட்டுளார்.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமீர் பரூக், இஸ்லாமாபாத் காவல்துறைத் தலைவர், உள்துறை அமைச்சகச் செயலர் மற்றும் கூடுதல் அட்டர்னி ஜெனரல் ஆகியோரை 15 நிமிடங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. "நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் ஏன் கைது செய்யப்பட்டார், எந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டார் என்பதற்கு எங்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று நீதிபதி ஃபரூக் தெரிவித்துள்ளார்.
என்ஏபி கடந்த மே ஒன்றாம் தேதி இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் ஆஜராவதற்கு வந்து இருந்தார். அப்போது பயோமெட்ரிக் பதிவிற்காக காத்துக் கொண்டு இருந்தவரை ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவப் படையினர் கைது செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கூறுகையில், ''பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராகவில்லை. நாட்டின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான்; வீட்டுக்குள் நுழைந்த போலீசார்; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!
இஸ்லாமாபாத்தில் நிலைமை தற்போது இயல்பாக இருக்கிறது. நகரில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நிலைமை தற்போது இயல்பாக இருக்கிறது. நகரில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) அக்பர் நசீர் கான் கூறியதாக இஸ்லாமாபாத் காவல்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், பிடிஐ தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான அல்-காதர் அறக்கட்டளைக்கு பஹ்ரியா டவுன் நிலம் ஒதுக்கியதாக கூறப்பட்ட வழக்கு தொடர்பாக இம்ரான் கைது செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.