பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவர் மீண்டும் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது .  பாகிஸ்தான் முன்னாள் இராணுவ அதிபர் பர்வேஸ் முஷரப்,   ஜனநாயகப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானை ராணுவ ஆட்சிக்கு மடைமாற்றி சர்வதேச அரங்கை தன் பாக்கம் திரும்பிபார்க்க வைத்தவர் ஆவார். 

திடீரென தன் அதிரடி நடவடிக்கையால்  ராணுவ ஆட்சியை கொண்டுவந்து  பாகிஸ்தான் அரசியல் வரலாற்றையே மாற்றிப்போட்டார் முஷரப், ஒரு சர்வாதிகாரி போல அப்போது அவர் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இப்போதும் உள்ளது.   ராணுவ  தளபதியான அவர் திடீரென நாட்டை கைப்பற்றி ஆண்டு வந்த நிலையில்  ஜனநாயக ரீதியில்  தேர்தலை சந்தித்து அதில்  படுதோல்வி கண்டார் .  மிரட்டல் உருட்டல் என ஆட்சி பீடத்தில் கோலோச்சிய முஷரப் தேர்தல் தோல்விக்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் போனார்.  இந்நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி தேச துரோகம் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது,  பின்னர் அதில் இருந்து தப்பிக்க வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை பாகிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .  ஆனால் அந்த வழக்கில் ஆஜராகாமல் அவர்  தள்ளிப்போட்டு வந்தார்.

 

இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால்,  வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் பாகிஸ்தான் நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்தார்.  பின்னர் அதை ஏற்றுக்கொண்ட  நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.  இந்நிலையில் மீண்டும் திடீரென  அவரது உடல் நிலை  மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார். ஒரு சில மாதங்களே ஒரளவுக்கு நல்ல நிலையில் இருந்த அவரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது  இதனால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.