Ukraine - Russia War: பயங்கர தாக்குதல்.. படைகள் குவிப்பு.. 1000 பேர் சரண்.. ரஷ்யா சொன்ன அதிர்ச்சி தகவல்..
உக்ரைன் - ரஷ்யா போரில் 1000 பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரில் 1000 பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில் ஒரு மாதம் தாண்டியும் இன்னும் ரஷ்யா போர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. ரஷ்ய இராணுவத்தின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் உருகுலைந்து உள்ளது. மேலும் தலைநகர் கீவ் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முயன்று வருகிறது.
முக்கிய நகரங்களான கீவ், கார்கீவ், கெர்சன், சுமி, லிவிவ், மரியுபோல், புச்சா உள்ளிட்ட இடங்களில் பயங்கர தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. மரியுபோல், புச்சா நகரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டியது. மேலும் ரஷ்யா உக்ரைன் மீது இனபடுகொலை நடத்திவருவதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஷெலன்ஸ்கி குற்றச்சாட்டி உள்ளார்.குறிப்பாக உக்ரைன் போரில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது. வழக்கம் போல் ரஷ்யா இதனை மறுத்துள்ளது.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. மேலும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீதி விதித்துள்ளது. மேலும் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை அமெரிக்காவும் விதித்துள்ளது. அண்மையில் ரஷ்ய அதிபர் புதினின் மகள்கள் மீது அமரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும் அமெரிக்கர் எந்தவொரு முதலீடுகளையும் ரஷ்யாவின் செய்ய தடை விதிக்கும் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்கள் கட்டுபாட்டில் இல்லாத இடங்களில் ரஷ்ய படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அண்மையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்உக்ரைன் தலைநகர் கீவ் சென்று உக்ரைன் அதிருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ரஷ்ய கூட்டமைப்பின் எந்தவொரு தயாரிப்பையும், இனி இறக்குமதி செய்யப்போவதில்லை என உக்ரைன் அதிபர் அறிவித்திருந்தார்.
நேற்று முந்தினம் உக்ரைன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் செலன்ஸ்கி ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியில் விரிவான போரை நடத்த வாய்ப்புள்ளது. உக்ரைனுக்கு எதிராக இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தலாம். எனவே, அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என்று எச்சரித்தார். அதே போல், உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா போர்படைகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரில் 1,000க்கும் அதிகமான உக்ரைன் ராணுவத்தினர் ரஷ்யாவிடன் சரணடைந்ததாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக மரியுபோலில் ஆயிரக்கணக்கான மக்களை ரஷ்ய ராணுவம் படுகொலை செய்ததாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.