இந்தியாவால் தனது நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்துக்கும் சேர்த்தே கொரோனா நோய் தடுப்பு மருந்தை தயாரிக்க முடியும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலகின் பெரும்  பணக்காரர்களின் ஒருவருமான பில்கேட்ஸ்  பாராட்டியுள்ளார். இந்தியாவிடம் அதற்கான அத்தனை தகுதிகளும், திறன்களும் இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொருநாளும் அதன் தீவிரமும், ஆபத்தும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் உலகில் லட்சக் கணக்கான மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். இந்த ஆபத்தான வைரஸில் இருந்து தப்பிக்க உலகமே தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவின் மருந்து ஆராய்ச்சியையும் அதன் மருந்து உற்பத்தி திறனையும் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

வியாழக்கிழமை மாலை டிஸ்கவரி பிளசில் ஒளிபரப்பப்பட்ட " கோவிட்-19 வைரசுக்கு எதிரான இந்தியாவின் போர் " என்ற ஆவணப்படத்தில் இந்தியாவின் மருந்து உற்பத்தி துறை மனது வைத்தால் தங்கள் நாட்டுக்கு மட்டுமல்ல அது உலகம் முழுவதற்கும் சேர்த்தே கொரோனா தடுப்பூசியை தயாரிக்க முடியும் எனவும் பில்கேட்ஸ் இந்தியாவை பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் மருந்தியல் துறையின் வலிமை குறித்து அவர் கூறுகையில், மருந்துகளை வேகமாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்வதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது. உலகளாவிய மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்களுடன் உலகம் முழுவதும் பெரும் சப்ளையர்களை இந்தியா கொண்டுள்ளது. எந்த  நாட்டையும் விட அதிகமான தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சீரம் நிறுவனம் தொடங்கி பயோ இ பாரத் (பயோடெக்)என பல நிறுவனங்கள் உள்ளன.

இந்தியர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை விரைந்து தயாரிக்கவும், அதற்கு உதவுவதற்காகவும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி தளங்களை உருவாக்க உலகளாவிய அடிப்படையில் செயல்படும் ஒரு குழுவான தொற்றுநோய் தடுப்பு தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியில் இந்தியாவும்  இணைந்துள்ளது. எனவே இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மற்றும் மருந்து தொழிற்சாலைகளால் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்துக்கும் சேர்த்தே அவர்களால் உற்பத்தி செய்ய முடியும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். covid-19 இந்தியாவை தாக்க தொடங்கியதுடன் அங்கு தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம், நோய் கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக உ.பி மற்றும் பீகாரில் உள்ள மக்களுக்கு எங்களது அறக்கட்டளை சார்பாக உதவிகளை செய்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.