ஒருவழியாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் கட்டுக்குள் வந்தது கொரோனா:முகக்கவசம் அவசியம் இல்லை என கட்டுப்பாடு தளர்வு.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 13 நாட்களாக புதிய வைரஸ் தொற்றுக்கள் பதிவாகவில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது அவசியம் என்ற கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 13 நாட்களாக புதிய வைரஸ் தொற்றுக்கள் பதிவாகவில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது அவசியம் என்ற கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அந்நாட்டை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது தலைநகர் பெய்ஜிங்கில் அது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வூபே மாகாணம், வூஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் இதுவரை2.28 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7.92 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.55 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்நாடுகளே முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 57 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு ஒரு லட்சத்து 77 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பிரத்தியேக தடுப்புசி கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே வைரஸ் தோற்று கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்த வைரஸ் சீனாவில் தோன்றியிருந்தாலும் கூட இந்த வைரசால் அந்நாடு அதிகம் பாதிக்கவில்லை. தற்போது அது வைரசிலிருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளது. உலகளவில் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில், சீனா 34வது இடத்தில் உள்ளது. இதுவரை அங்கு மொத்தத்தில் 84 ஆயிரத்து 917 பேர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 634பேர் உயிரிழந்துள்ளனர். 79 ஆயிரத்து 792 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கு வெறும் 496 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதமே சீனாவில் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், பிறகு மீண்டும் 100 நாட்கள் கழித்து இரண்டாவது அலை ஏற்பட்டது.
இதனால் பதற்றமடைந்த சீனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது, அதன் விளைவாக சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 13 நாட்களுக்கு மேலாக புதிய வைரஸ் தொற்று ஏதும் பதிவாகவில்லை என சீன நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான மக்கள் முகக்கவசங்களை அணிந்தவாறே வெளியில் செல்கின்றனர். முக கவசத்தை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக உணர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பீஜிங்கில் புதிய வைரஸ் தொற்று உருவாகாததால் அங்கு நோய்த்தொற்று முழுவதும் கட்டுக்குள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்க தளர்த்தியுள்ளது.
அதேபோல் லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்சிகோ, பிரேசில், பெரு மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நான்கு நாடுகளில் மட்டும் 3.5 மில்லியனுக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் உலக அளவில் நோய்த்தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் பெரு மற்றும் அர்ஜென்டினாவில் புதிய வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன, கடந்த வாரத்தில் இந்நாடுகளில் ஒவ்வொரு நாளும் தலா 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ரஷ்யா தனதுகொரோனா தடுப்பூசியை பெருமளவில் பரிசோதிப்பதற்காக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் கீழ் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும், இந்த சோதனையின் செயல்முறை அடுத்த வாரம் முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இதில் வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது, ரஷ்யா தனது தடுப்பூசியின் 2000 டோஸை மெக்சிகோவுக்கு சோதனைக்காக அனுப்ப முடிவு செய்துள்ளது. அதேபோல் தடுப்பூசி பற்றிய தகவல்களையும் அந்நாடு உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியை தயாரித்திருப்பதாக ரஷ்ய அறிவித்தது குறிப்பிடத்தக்கது.