உலகின் கவனத்தை ஈர்த்த மிக மிக அதிக வயதுடைய அதிசய ஆமை ..?! உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..!
நைஜீரியாவின் அரண்மனையில் வசித்துவந்த 344 வயதுடைய அலக்பா என்கிற ஆமை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நைஜீரியா நாட்டில் இருக்கும் ஒரு அரண்மனையில் அலக்பா என்கிற ஆமை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த ஆமை ஆப்பிரிக்காவின் மிக வயதான ஆமை என்றும் இது 17 ஆம் நூற்றாண்டில் இருந்து அந்த அரண்மனைக்கு எடுத்து வந்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்குப்பிறகு பல மன்னர்கள் மாறி விட்ட நிலையிலும் அரண்மனையில் ஒரு குடும்ப உறுப்பினராகவே அந்த ஆமை வளர்ந்து வந்திருக்கிறது.
இந்த ஆமையை வாழ்வில் பிரச்சனைகளுடன் வருபவர்கள் பார்த்து சென்றால் அவர்களின் பிரச்சினைகள் நீங்க விடுவதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த ஆமையை பார்வையிடுவதற்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆமையை பராமரிப்பதற்காக அரண்மனை சார்பில் இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு இருந்திருக்கின்றனர்.
அவர்கள் கூறும்போது இந்த ஆமை மாதத்திற்கு இருமுறை மட்டுமே உணவருந்தும் பழக்கம் உடையது என்கிறார்கள். இந்தநிலையில் இந்த ஆமை தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டதாக தற்போதைய மன்னர் அறிவித்துள்ளார். ஆமை இறந்து விட்டாலும் அதன் உடலைப் பாதுகாத்து வைத்து வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்போவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த ஆமையின் உண்மையான வயது 344 ஆக இருக்காது என்று கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஒரு ஆமை தோராயமாக 80 ஆண்டுகளாக உயிருடன் இருக்கும் என்றும் மிக அரிதாக 200 ஆண்டுகள் வரை ஆமைகள் உயிர் வாழும் தன்மை உடையவை என்றும் கூறுகின்றனர்.
இந்தியாவில் இருக்கும் கொல்கத்தா உயிரியல் பூங்காவில் 250 வயது ஆமை கடந்த 2006 இல் தான் உயிரிழந்தது. இதனை 17ம் நூற்றாண்டிலிருந்து பிரிட்டிஷ் மீனவர்கள் சிலர் ராபர்ட் கிளைவுக்கு பரிசாக அளித்ததாக தகவல் இருக்கின்றது. இந்தியாவின் மிக அதிக வயதுடைய ஆமையாக இது இருந்ததாகவும் கருதப்படுகிறது.