அக்டோபர் மாதம் இனி இந்து பாரம்பரிய மாதம்... இந்து மக்களுக்கு இன்ப அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க மாகாணம்.!
அக்டோபர் மாதத்தை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணம் இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது.
தை மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கனடா அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணம், நவராத்திரி, தீபாவளி என இந்துக்களின் பண்டிகைகள் அணிவகுக்கும் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் ராய் கூப்பர், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உலகிலேயே மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்தான். உலகில் நூறு கோடிக்கும் மேலான இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 40 லட்சம் பேர் உள்ளனர். இந்து பாரம்பரியம், கலாசாரம், மரபுகள், மதிப்புகள் போன்றவை வாழ்க்கையின் பல பிரச்னைகளுக்குத் தீர்வுகளை வழங்குகின்றன.
அமெரிக்காவில் உள்ள துடிப்பான இந்து சமூகம், வடக்கு கரோலினா மாகாண குடிமக்களின் வாழ்க்கையை வளப்படுத்தி பெரும் பங்களிப்பு ஆற்றி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வடக்கு கரோலினா மாகாணத்தில் இந்து மதத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கூட்டாக கொண்டாட உள்ளோம். இந்த அறிவிப்பின் மூலம் நடப்பு அக்டோபர் மாதத்தை, வடக்கு கரோலினாவில் ‘இந்து பாரம்பரிய மாதமாக' அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஆளுநர் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.