என்னை சிறந்த அதிபராக மாற்றியவர் ஹிலாரி கிளிண்டன் தான், அதற்காக ஒருபோதும் எந்தவிதமான உரிமையையும் அவர் கொண்டாடியதில்லை என்று அதிபர் ஒபாமா ஹிலாரிக்கு புகழாரம் சூட்டினார்.

தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 8-ந்தேதி நடக்க இருக்கிறது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இரு அதிபர் வேட்பாளர்களும் தங்களின் பிரசாரம் தீவிரமாக்கியுள்ளனர்.

இதனிடையே ஓர்லாண்டா நகரில் ஹிலாரியை ஆதரித்து அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

உரிமை கோரவில்லை

ஹிலாரி கிளிண்டனின் முயற்சிகள், செயல்பாடுகள் எப்போதும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதில்லை, அவரை எப்போதும் யாரும் ஊக்கப்படுத்தியது இல்லை. ஆனாலும், என்னை அவர் சிறந்த அதிபராக மாற்றி இருக்கிறார். அதற்காக அவர் எந்த உரிமையையும் கொண்டாடியதில்லை.

இந்த நாட்டின் முப்படைத் தளபதியாக வந்து, நிச்சயம் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பார் என்று நம்புகிறேன். அமெரிக்காவுக்கு மிகவும் புத்திசாலித்தனமான, நிலையான அதிபராக ஹிலாரி இருப்பார்.

கடின நேரம்

என்னுடைய ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி பணியாற்றி பார்த்து இருக்கிறேன். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அழிப்பது தொடர்பான கடினமான நேரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹிலாரி பங்கேற்று தனது கருத்துக்களை வலிமையாகத் தெரிவித்திருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து இந்த உலகம் முழுவதும் ஓய்வின்றி வலம் வந்திருக்கிறார். அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் ஹிலாரி கிளிண்டன்.

ஹிலாரி இந்த உலகை புரிந்துகொண்டவர். நாம் என்ன சவால்களை சந்திக்கிறோம் என்பதை புரிந்துகொண்டவர். அவருக்கு சாதகமாக ஏதும் நடக்கவில்லை என்றால் அது குறித்து யார் மீதும் புகார் கூறமாட்டார், வருத்தப்படமாட்டார். டிரம்ப் போல் தில்லுமுல்லு நடக்கிறது என்றும் கூறமாட்டார்.

மதிப்பளிப்பவர்

தேர்தல் தனக்கு சாதமாக அமைந்து வெற்றி கிடைத்தால் சிறப்பான தேர்தல் என்றும், தேர்தலில் தோல்வி அடைந்தால், மோசமான தேர்தல், தில்லுமுல்லு நடந்துவிட்டது என்ற அறிக்கையையும் ஹிலாரி விடாதவர். கடினமாக உழைத்து, சிறப்பாகச் செயலாற்றக்கூடியவர் ஹிலாரி.

ஹிலாரி கடின உழைப்புக்கும், அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கத்துககும் நன்கு மதிப்பளிப்பவர்.

ஹிலாரி ஏதாவது தவறுகள் செய்திருக்கிறாரா? செய்து இருக்கலாம். நான் கூட தவறுகள் செய்து இருக்கிறேன். 30 ஆண்டு பொது வாழ்கையில் ஈடுபட்ட ஒருவரும் தவறு செய்யாமல் இருந்திருக்க முடியாது. ஆனால், அடிப்படையில் ஹிலாரி மிகவும் நாகரீகமானவர், அவர் சிறப்பான அதிபராக உருவாகக்கூடியவர்.

இவ்வாறு அவர் பேசினார்.