ஓட்கா, பீர், கருவாட்டுத் துண்டு....!! சரக்கடிப்பதையே குறைத்துக்கொண்ட நாடு..!! நள்ளிரவு மது விருந்துக்கும் தடை...!!
ரஷ்யாவில் நள்ளிரவு மது விருந்துக்குக்கூட அனுமதி இல்லை. இரவு 11 மணிவரை மட்டும்தான் மதுவை வாங்கவும் விற்கவும் முடியும் என்று புதிய கட்டுப்பாடு. இது போன்ற கடுமையான நடவடிக்கைகளால்தான் ரஷ்யர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.
எப்போதும் இல்லாத அளவிற்கு சமீபகாலமாக ரஷ்யாவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், அந்நாட்டு மக்களின் சராசாரி ஆயுட்காலமும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் அங்கு குடிப்பவர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருகாலத்தில் ரஷ்ய கடைவீதிகளில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சகிதம் ஓட்காவும், கண்ணாடி டம்ளரில் பொங்கும் பியரும், கருவாட்டு துண்டுகளுமாகவே காட்சி அளிக்கும். ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளதுதான் ரஷ்யாவின் தற்போதைய ஆரோக்கியத்திற்கு காரணம். சமீபகாலமாக அந்நாட்டு அரசு மதுவுக்கு எதிராக எடுத்த தீவிர பிரச்சாரத்தின் காரணமாக மது அருந்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ரஷ்யர்கள் மதுப்பிரியர்கள், போதைக்கு அடிமையானவர்கள் என்றும், மற்ற நாட்டவர்களால் விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில், அங்கு மதுவால் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டது. குறிப்பாக வேலைக்கு செல்லும் இளைஞர்களும் அதிக அளவில் உயிரிழந்தனர்.
ரஷ்யாவில் மது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் , மதுவை கட்டுப்படுத்தும் வேலைகளில் அரசு தீவிரம் காட்டத் தொடங்கியது. மது விற்பனை நேரம் குறைப்பு, மது தொடர்பான விளம்பரங்களுக்கு தடை, மதுவுக்கு கூடுதல் வரி விதிப்பு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மது விற்கப்பட வேண்டும் என கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் குடிப்பவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் பாதி அளவிற்கு குறைந்துள்ளது. இப்போதெல்லாம் ரஷ்யாவில் நள்ளிரவு மது விருந்துக்குக்கூட அனுமதி இல்லை. இரவு 11 மணிவரை மட்டும்தான் மதுவை வாங்கவும் விற்கவும் முடியும் என்று புதிய கட்டுப்பாடு. இது போன்ற கடுமையான நடவடிக்கைகளால்தான் ரஷ்யர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இளம் வயதினர்கள் கூட மதுவுக்கு பலியாகி வந்த நிலையில் இப்போது அவர்களின் சராசரி ஆயுட்காலமே இரட்டிப்பாகி உள்ளது. ஆணின் சராசரி ஆயுட்காலம் 68 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் உயர்ந்துள்ளது. குடியை விற்று குடியை கெடுத்துவரும் அரசுகளுக்கு மத்தியில், குடியை ஒழித்து குடிமக்களை காக்கும் ரஷ்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.