பென்டிரைவில் படம் ஏற்றி விற்றவருக்கு மரண தண்டனை… வடகொரியாவில் பரபரப்பு!!
ஸ்க்விட் கேம் என்னும் இணையதொடரை பென்டிரைவில் ஏற்றி விற்பனை செய்தவருக்கு வடகொரியா அரசு மரண தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்க்விட் கேம் என்னும் இணையதொடரை பென்டிரைவில் ஏற்றி விற்பனை செய்தவருக்கு வடகொரியா அரசு மரண தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் எழுதி இயக்கியுள்ள ஸ்க்விட் கேம் என்னும் இணைய தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. இந்த ஸ்க்விட் கேம் என்னும் இணைய தொடர் வெளியான உடனே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்ததோடு உலக புகழ்பெற்ற 10 வெப்சீரிஸ்களிலும் இடம்பெற்றது. தென் கொரியாவில் நிலவும் மக்கள் பிரச்சனைகளையும் உயிரைப் பணயம் வைத்து, தங்கள் வாழ்வையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு தொகையைப் பரிசாகப் பெறத் துணியும் மக்களின் நிலையை பற்றியும் கூறுகிறது. ஸ்க்விட் கேம் இணைய தொடர். கொரிய தொலைக்காட்சித் தொடரான ஸ்க்விட் கேம் வெளியான முதல் நான்கு வாரத்தில் 142 மில்லியன் (14.2 கோடி) குடும்பங்கள் பார்த்துள்ளனர்.
இதுவரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் காணப்பட்ட தொடர் என்கிற பெருமையையும் ஸ்க்விட் கேம் பெற்றுள்ளது. 21.4 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து எடுக்கப்பட்ட ஸ்க்விட் கேம் தொடர், தற்போது சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கலாம் என ப்ளூம்பெர்க் நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிலையில் ஸ்க்விட் கேம் இணைய தொடரை வடகொரியாவைச் சேர்ந்த ஒருவர் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு பென் டிரைவில் ஏற்றி விற்பனை செய்து உள்ளார். மாணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அதனை பள்ளியில் வைத்து பார்த்து உள்ளார். இது குறித்து அறிந்த வடகொரிய சட்ட அமலாக்க வட்டாரம் மாணவர்களை பிடித்து விசாரித்துள்ளது. இதை அடுத்து ஸ்க்விட் கேமின் நகல்களை விநியோகம் செய்த வட கொரிய நபர் ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்க்விட் கேம் பார்க்க ஆவலுடன் பென் டிரைவை வாங்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த நபர் இந்த ஸ்க்விட் கேமின் நகலை சீனாவில் வாங்கி அதை வட கொரியாவிற்கு கொண்டு வந்து பென்டிரைவ்களில் ஏற்றி பிரதிகளை விற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு சுரங்கங்களில் வேலை செய்யும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்க்விட் கேம் என்னும் இணையதொடரை பென்டிரைவில் ஏற்றி விற்பனை செய்தவருக்கு வடகொரியா அரசு மரண தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.