உலக நாடுகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வடகொரிய அதிபர்!! டிரம்ப் வரவேற்பு
அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாகவும் சோதனை தளத்தை மூடுவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருப்பது உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துவந்தன.
ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையையும் நடத்திவந்தது. இதையடுத்து வடகொரியா மீது ஐநா பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவை பலமுறை பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தவில்லை.
இந்த விவகாரத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பரஸ்பரம் மிரட்டல் விடுத்து கொண்டனர். இந்நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்திருந்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு டிரம்பும் ஒப்புக்கொண்டார்.
வரும் ஜூன் மாதம் இந்த சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், ஒட்டும்மொத்தமாக அணு ஆயுத சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் நிறுத்துவதாக தெரிவித்துள்ள வடகொரிய அதிபர், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக தொடர்ந்து செயல்பட்டுவந்த வடகொரியா, அணு ஆயுத சோதனையை முற்றிலுமாக நிறுத்தியதற்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்பும் வரவேற்பு தெரிவித்துள்ளார். வட கொரியாவின் அறிவிப்பு அந்நாட்டுக்கு மட்டுமின்றி உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.