2025 வரை குறைவாக சாப்பிடவும்… வடகொரியா அதிபரின் அதிரடி உத்தரவால் மக்கள் அதிர்ச்சி!!
வடக்கொரியாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் அனைவரும் குறைவாக சாப்பிட வேண்டும் என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனாவால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நிறுவனங்கள் பல மூடப்பட்டு மக்கள் பலர் வேலை இழந்தனர். இதனால் ஏராளமானோர் ஒருவேலை உணவுக்கே வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதேபோல் கொரோனா பரவலை தடுக்க வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை முற்றிலுமாக மூடியது. அத்தோடு சீனாவுடனான வர்த்தக தொடர்பையும் நிறுத்திக்கொண்டது. இதனால் அந்த நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பொதுவாக வடகொரியா நாட்டில் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் அங்கு நடக்கும் அனைத்து விஷயங்களும் வெளி உலகிற்கு பெரிதாக தெரிவதில்லை. அனைத்து தகவல்களும் ரகசியமாக காக்கப்படும். அந்நாட்டு ஊடகங்கள் உட்பட அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் எந்த தகவலும் வெளியில் தெரிவதில்லை. இந்த நிலையில் தங்கள் நாட்டில் நிலவும் உணவு பஞ்சத்தை அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன், வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். உணவு, உரம், எரிபொருள் என அனைத்திற்கு வடகொரியா சீனாவையே நம்பியிருந்த நிலையில் சீனாவுடனான வர்த்தக தொடர்பை முற்றிலுமாக நிறுத்தியதால் இந்த நிலைக்கு வடகொரியா தள்ளப்பட்டுள்ளது. வடகொரியா அடிகடி அணுஆயுதப் பரிசோதனைகள் செய்ததால் அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
இந்நிலையில் தற்போது உணவுப் பஞ்சமும் ஏற்பட்டிருப்பது அந்நாட்டிற்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உணவு பொருட்களுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். இதனால் வட கொரிய மக்கள் பலர் இவ்வளவு விலைக்கொடுத்து உணவு வாங்க முடியாமல் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், மக்களுக்கான உணவு தற்போது போதுமான அளவு இல்லை. வேளாண் துறை பயிர் உற்பத்தியை திட்டமிட்டபடி செய்யவில்லை. இதுவே இத்தகைய உத்தரவு பிறபிக்க காரணம் என்கிறார். ஆனால் அதிபர் கிம் ஜோங் உன்னின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்து நாடும் ஒரு வழியில் செல்லும் என்றல் வடகொரியா அதிபர் மட்டும் வேறு வழியில் செல்வர். அத்தகைய குணம் கொண்ட அதிபர் கிம் ஜோங் உன், இந்த உணவு பஞ்சத்தை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்ற ஐயம் ஒருபுறம் இருக்க மறுபுறம் மக்கள் கொஞ்சமாக சாப்பிட சொல்லும் அவரது இந்த திட்டம் உணவு பஞ்சத்தை போக்குமா என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும். இதேபோல் தான் சமீபத்தில் இலங்கையும் இயற்கை விவசாய முறைக்கு மாறி உணவு உற்பத்தி குறைந்து கடும் உணவுப்பஞ்சத்தை சந்தித்தது. அந்த வரிசையில் தற்போது வடகொரியாவும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.