கிறிஸ்துவர்கள் சர்ச்சுக்குப் போக வேண்டாம் ! இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வேண்டாம் ! இலங்கை அரசு எச்சரிக்கை !!
இலங்கையில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதால் கிறிஸ்துவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், இஸ்லாமியர்கள் நாளை மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்றும் இலங்கை அரசு எச்சரித்துள்ளது.
இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் புகைப்படம் இன்று வெளியானது. இலங்கை போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் உள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதாக கருதப்படும் இவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்களையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் என்றும், வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து கிறிஸ்துவர்கள் வரும் ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், இஸ்லாமியர்கள் நாளை வெள்ளிக் கிழமை மசூதியில் தொழுகை நடத்த வேண்டாம் என்றும் இலங்கை அரசும் எச்சரித்துள்ளது.