No cars ACs for Uttarakhand govt till schools get chairs

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காத வரை, அரசு அதிகாரிகளுக்கு ஏ.சி., கார், பர்னிச்சர்ஸ் என எந்த சொகுசு பொருட்களும் வாங்கக் கூடாது என மாநில உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வரை, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளின் ஊதியத்தையும் ஏன் நிறுத்தி வைக்க கூடாது என்று கேட்டு அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு, டேராடூனைச் சேர்ந்த தீபக் ரானா என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார்.

அதில், மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறது. அதை செய்து கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அடிப்படை வசதிகளான மாணவர்கள் அமரும் இருக்கை, கரும்பலகை, மின்விசிறி, மேஜை, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டது.

ஆனால், பல முறை இது தொடர்பாக உத்தரவிட்டும் மாநில அரசு அதை நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக மீண்டும் மனுதாரர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அரசு உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ராஜீவ் சர்மா, அலோக் சிங் ஆகிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் , அரசையும் அதிகாரிகளையும் கடுமையாக கண்டித்ததோடு, கேள்விகளால் வறுத்தெடுத்து விட்டனர்.

நீதிபதிகள் கூறுகையில், “ மாணவர்கள் படிப்புக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசு அக்கறை காட்டவில்லை.

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அடிப்படை வசதிகளான மாணவர்கள் அமரும் இருக்கை, கரும்பலகை, மின்விசிறி, மேஜை, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க நாங்கள் கூறினோம். ஆனால், அதை தவிர்த்து விட்டு அரசு அதிகாரிகளுக்கு ஏ.சி., கார்கள், பர்னிச்சர்கள் என சொகுசு பொருட்களை வாங்க அரசு நிதி அளிக்கிறது.

மாணவர்களுக்கு தரமான கல்வியும், அடிப்படை கல்விக்கான வசதிகளையும் செய்து தருவது ஒரு அரசின் கடமையாகும். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரும், சுகாதாரமான கழிப்பறையும் இருப்பது இன்றியமையாதது. அரசு எதிர்காலசந்ததியினரின் கல்விக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

எங்கள் உத்தரவை செயல்படுத்தும் வரை, மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கு ஏ.சி., கார், பர்னிச்சர்ஸ் என எந்தவிதமான ஆடம்பரபொருட்களும் அரசு சார்பில் வாங்கக் கூடாது. மேலும், இந்த உத்தரவை செயல்படுத்தாத காரணத்தால், அனைத்து அரசு அதிகாரிகளின் ஊதியத்தையும் ஏன் நிறுத்திவைக்க கூடாது என நினைக்கிறோம். இதற்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது” என்று தெரிவித்தனர்.