நைஜுரியாவில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. கவிழ்ந்த லாரியை கண்ட அப்பகுதி மக்கள் பெட்ரோலை பாத்திரத்தில் பிடிக்க குவிந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.