டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் அங்கு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் உலகத்தின் பிற நாடுகளில் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 203 நாடுகளுக்கு பரவி விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் 12,73,794 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 69,419 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதுவரையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கும் நிலையில் 9,626 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயால் வல்லரசு அமெரிக்காவே நிலை குலைந்து போயுள்ளது. அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயார்க் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மட்டும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியிருக்கிறது. 1½ லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நியூயார்கில் நேற்று மட்டும் 630 பேர் பலியாகி உள்ளனர். சராசரியாக 2½ நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொரோனாவிற்கு பலியாகுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அமெரிக்காவில் கொரோனா பலி அதிகரிக்கும் என்றும் நியூயார்க் மாகாணத்தில் உச்சத்தை எட்டும் எனவும் அம்மாநில ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ஆலோசனை செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா ஆர்டர் செய்திருக்கும் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளை விரைந்து அனுப்ப கோரிக்கை விடுத்தார். கொரோனா பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்காவே நிலைகுலைந்து போயிருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் கடும் பீதியில் இருக்கின்றன.