கொரோனாவை துவம்சம் செய்ய புதிய தடுப்பூசி..!! ஜூலை மாதம் தயாராகும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!!
ஜூலை மாத இறுதியில் இந்த மருந்தின் செயல்பாடுகளை ஒரளவுக்கு கணிக்க முடியும் என்றும் பின்னர் அது பயன்பாட்டுக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் நோவாவாக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகளவில் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றும் தடுப்பூசியின் முதற் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக பயோடெக் நிறுவனங்களில் ஒன்றான நோவாவாக்ஸ் அறிவித்துள்ளது . உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த பிரத்தியேக தடுப்பூசி இல்லாத காரணத்தினால் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருக்கிறது, இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகிறது . இந்நிலையில் தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது . அதனால் உலக அளவில் உள்ள பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இரவு பகல் பாராமல் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் .
இந்நிலையில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் புதியபுதிய நிறுவனங்கள் புதியபுதிய மருந்துகளின் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு வருகின்றன, இந்நிலையில் பயோடெக் நிறுவனமான நோவாவாக்ஸ் கொரோனா வைரசுக்கு எதிரான என்விஎக்ஸ், கோவி- 2373 என்ற மருந்தை உருவாக்கி உள்ளதுடன் அதை விலங்கு பரிசோதனைக்கு உட்படுத்தி அது நல்ல முறையில் செயலாற்றியுள்ளதையும் உறுதிசெய்துள்ளது விலங்கு பரிசோதனையில் இந்த மருந்து நோய்யெதிர்ப்பு காரணிகளை உருவாக்கியதுடன் அதிக அளவில் ஆன்ட்டிபயாட்டிக்களை உருவாக்கும் திறன் கொண்டிருப்பதாகவும் மேரிலேண்டை மையமாகக் கொண்ட பீட்டர்ஸ் பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது . நோவாவாக்ஸால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மனிதர்களில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடியது எனவும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க இது சிறந்த மருந்தாக பயன்படும் என்றும் , இந்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் மேரிலாந்து பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் மேத்யூ ஃபிரைமேன் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து சில ஆராய்ச்சி படி நிலைகளுக்கு பின்னர் உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் நோவாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தலைவர் டாக்டர் கிரிகோரி கூறியுள்ளார் , இந்த மருந்து மே மாதத்தின் முதல் வாரத்தில் மனித சோதனைக்கு (இரண்டாம் கட்ட சோதனை ) உட்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தடுப்பூசியை வெளியிடுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு மற்றொரு நிறுவனமான கெய்தெஸ்பர்க் நிறுவனத்தின் எமர்ஜென்ட் பயோ சொல்யூஷன்ஸுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. சார்ஸ், கோவிட், போன்ற வளர்ந்து வரும் வைரஸ்களுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியில் நானோ துகள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. என்விஎக்ஸ், கோவி- 2373 என்ற இந்த மருந்து மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ள நிலையில், ஜூலை மாத இறுதியில் இந்த மருந்தின் செயல்பாடுகளை ஒரளவுக்கு கணிக்க முடியும் என்றும் பின்னர் அது பயன்பாட்டுக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் நோவாவாக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.