தென் கொரியா அரசு மீது எதிர்க்கட்சிகள் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதிபரின் நெருங்கிய நண்பர் அரசு விவகாரங்களில் தலையிட்ட விவகாரம் ஆகியவற்றால் அரசுக்கு புதிய பிரதமர், நிதியமைச்சரை நியமித்து அதிபர் பார்க் கியுன் ஹி நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்தார்.
அதுமட்டுமல்லாமல் தற்போதுள்ள அரசு மற்றும் நிர்வாகம் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகி வரும் நிலையில், அதைச் சமாளிக்க பொதுமக்கள் பாதுகாப்புதுறை என்ற பெயரில் புதிய அமைச்சரையும் அதிபர் நியமித்துள்ளார்.
அதிபரின் நண்பர்
அதிபர் பார்க் கியுன் ஹியின் நீண்டகால நண்பர் சோய் சூன்சில். இவருக்கு அரசியல் ரீதியாக எந்த பதவியும், பொறுப்பும் இல்லாத நிலையில், அரசு விவகாரங்களில் தலையிடுவது, கொள்கை முடிவுகளில் தலையிட்டு, அமைச்சர்களை நியமனம் செய்வது என இருந்தார். இதனால் அரசில் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டது. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பின. மேலும், மக்கள் மத்தியிலும் அரசின் செயல்பாடு குறித்து பெரும் அதிருப்தி உண்டானது. இதைத்தொடர்ந்து அதிபர் பார்க் கியுன் ஹி இந்த அமைச்சரவை மாற்ற முடிவை எடுத்துள்ளார்.
விசாரணை
தற்போது அதிபர் பார்க் கியுன் ஹியுன் உள்ள நட்புறவு ஏற்பட்டது குறித்தும், மற்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் சோய் சூன் சில்லை அரசு வழக்கறிஞர் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து அரசு வழக்கறிஞர்கள் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ மோசடி மற்றும் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் குற்றச்சாட்டில் சோய் சூன்சில்லை கைது செய்ய வாரண்ட் கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம். அதிபருக்கு நெருக்கமாக இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஏராளமான நிறுவனங்களிடம் பெற்று அவர்களுக்கு சாதகமான விஷயங்களை செய்து கொடுத்துள்ளார்'' என்று தெரிவித்தார்.
புதிய பிரதமர்
இதனிடையே அதிபரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ தற்போது அரசுமீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டில் தொடர்பு உள்ள பிரதமர் வாங் யோ அன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கிம் யாங் ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார்'' எனத் தெரிவித்தார்.
இந்த அமைச்சரவை மாற்றம் என்பது வெறும் கண்துடைப்பு என்று முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது.
