உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்திருப்பது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூபே மாகாணம், வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ், சுமார் 150 க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் மக்கள் கொத்துக்கொத்தாக பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். ஒரு பிரத்யேக தடுப்பூசி கண்டிபிடித்தால் மட்டுமே இந்த வைரசை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

இந்நிலையில் உலக அளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அதற்கான ஆராய்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக வந்துள்ள தகவல் ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  முழு அடைப்பு, சமூக இடைவெளி என அரசுகள் எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கை கொடுத்து வரும் அதே வேளையில், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக களத்தில் நிற்கும் மருத்துவர்களின்  அர்ப்பணிப்பு மிக்க சேவையால், வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி, உலக அளவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழந்துள்ளனர். 

இதுவரை உலக அளவில் 95 லட்சத்து 95 ஆயிரத்து 463 பேர்  சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உலக மக்கள்  மத்தியில் ஆறுதலையும் புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு  அமெரிக்காவே இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 41 லட்சத்து 75 ஆயிரத்து 379 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 92 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 13 லட்சத்து 14 ஆயிரத்து 616 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.