நேபால் விமான விபத்து - மகராஷ்டிராவை சேர்ந்த நான்கு பேர் மாயம்... தேடுதல் வேட்டை தீவிரம்..!
திரிபாதி குடும்பத்தினர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியை அடுத்த ரஸ்டோம்ஜி அத்தெனா குடியிருப்பில் வசித்து வந்தனர்.
நேபாலத்தில் விபத்தில் சிக்கிய தாரா ஏர் விமானத்தில் பயணித்த மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மாயமாகி உள்ளனர். மொத்தம் 22 பேர் பயணம் செய்த நிலையில் தாரா ஏர் விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது. பின் இரண்டு மணி நேரங்கள் கழித்து மஸ்டங் பகுதியை சேர்ந்த கோவங் எனும் இடத்தில் விமானம் கண்டெடுக்கப்பட்டது.
விமானத்தில் மாயமான நான்கு பேர் 54 வயதான அசோக் திரிபாதி, அவரின் மனைவி வைபவி பந்தேகர் திரிபாதி (51 வயது), மகன் தன்சயா திரிபாதி (வயது 20) மற்றும் மகள் ரித்திகா திரிபாதி (வயது 18) என தெரிய வந்துள்ளது. திரிபாதி குடும்பத்தினர் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியை அடுத்த ரஸ்டோம்ஜி அத்தெனா குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த குடும்பத்தார் விடுமுறையை கழிக்க நேபாளத்திற்கு சுற்றுலா சென்று இருந்தனர்.
மீட்பு பணி:
நேபால் நாட்டின் கபுர்பாவ்டி போலீசார் மகாராஷ்டிராவை சேர்ந்த குடும்பத்தார் மாயமாகினர் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். நேற்று விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து பணிப் பொழிவு காரணமாக மீட்பு பணிகள் நேற்று நிறுத்தப்பட்டது. இன்று காலை வானிலை சீரானதை அடுத்து நேபால் ராணுவத்தினர் மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர். ராணுவ படையினர் வான்வழியாக விபத்துக் களத்திற்கு சென்றடைந்தனர்.
முன்னதாக காணாமல் போன விமானத்தை தேட இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் இரண்டு மணி நேரம் காணாமல் போன நிலையில், விமானம் விபத்தில் சிக்கியது உறுதிப்படுத்தப்பட்டது. மஸ்டங் மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக நேற்று மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.
நேபால் காவல் துறை ஆய்வாளர் ராஜ் குமார் தமங் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விமானம் மூலம் சென்றடைந்தார். “சில பயணிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. போலீசார் விபத்துக் களத்தில் இருக்கும் விமான எச்சங்களை சேகரித்து வருகின்றனர்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.