இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது. இந்தியா-சீனா எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில்,  அவசர அவசரமாக நேபாளம் வெளியிட்ட திருத்தப்பட்ட எல்லை வரைபடத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்க மறுத்துள்ளது. அமைச்சரவை அந்த வரைபடத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அது தோல்வி அடைந்துள்ளது.  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சுமார்  1800 கிலோ மீட்டர்  நீளத்திற்கு எல்லை அமைந்துள்ளது.  இந்நிலையில் இந்தியாவுடன் நல்ல முறையில் நட்பு பாராட்டி வந்த நேபாளம் கடந்த 1816 இல் ஆங்கிலேய காலனி ஆதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை  அடிப்படையாக வைத்து லிபுலேக் கணவாய் தனக்கு சொந்தமென உரிமை கொண்டாடி வருகிறது. 

அதேபோல் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட லிம்பியா துரா, கலபானி உள்ளிட்ட பகுதிகளையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மூன்று பகுதிகளையும் தனது எல்லைக்குள் அடங்கும் வகையில் நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கு நேபாளத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. நேபாளத்தின் இந்த நடவடிக்கையை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன்,  சீனாவின் தூண்டுதலின் பேரில்தான் நேபாளம் இப்படி நடந்து கொள்கிறது என விமர்சித்தது,  ஆனால் இந்தியாவை திருப்பி தாக்கிய அந்நாட்டின் பிரதமர் ஷர்மா  ஓலி,  இந்திய  பகுதிகளான  லிம்பியா துரா, கலபானி,  லிபுலேக் பகுதிகளை என்ன ஆனாலும் நேபாளத்திற்குள் கொண்டு  வருவோம் என தெரிவித்தார்.

இது இந்தியா-நேபாளத்திற்குமிடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியது, அதுமட்டுமின்றி இந்தியாவை கடுமையாக விமர்சித்த அவர்,  சீனா வைரசை விட இந்தியா வைரஸ் மிகக் கொடியது என கூறியிருந்தார்.  இது இந்தியாவை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது, ஏற்கனவே  எல்லையில் சீனா ,பாகிஸ்தானின் எதிர்ப்பை இந்தியா சமாளித்து வரும் நிலையில்,  நேபாளமும் இந்தியாவுக்கு எதிராக  திரும்பியது இந்திய தலைவர்களை வியப்படைய வைத்தது.  இந்நிலையில் அவசரஅவசரமாக லிம்பியா துரா,  லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய வரைபடம் மற்றும் அதற்கான மசோதா  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.  இது பிரதமர் ஷர்மா ஓலியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.