Asianet News TamilAsianet News Tamil

சீனாவிடம் பேச முடிந்த இந்தியாவால் ஏன் எங்களிடம் பேசமுடியாது..!! அடம்பிடிக்கும் நேபாளம்...!!

covid-19 தொற்று நோய்களுக்கு மத்தியிலும் எல்லை பிரச்சனைகளை தீர்க்க சீனா போன்ற பிற நாடுகளுடன் இந்தியா பேச முடியும் என்றால், ஏன் காத்மாண்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.? 

Nepal external afire minister asking why not India talk with Nepal
Author
Delhi, First Published Jun 13, 2020, 10:34 AM IST

எல்லை பிரச்சனைகளை தீர்க்க சீனா போன்ற பிற நாடுகளுடன் இந்தியா பேச முடியும் என்றால், அது ஏன் நேபாளத்துடன் பேச முடியாது. இந்தியா- சீனா ராணுவத் தளபதிகள் எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க முடியுமானால், அது ஏன் எங்கள் தேசத்துடன் விவாதிக்க முடியாது என நேபாள வெளியுறவு அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா என்ற கொள்ளைநோய் பிரச்சினையை சமாளிக்க இந்தியா போராடி வரும் நிலையில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான எல்லைப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது அந்நாடுகளின் வரிசையில் நேபாளமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்ற பழமொழிக்கு ஏற்ப, நேபாளத்தின் நடவடிக்கைகள் மாறியுள்ளது. கடந்த 1816ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மற்றும் நேபாளம் தரப்பினரிடையே கையெழுத்தான சுகாலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிம்பியாதூரா, லிபுலேக் பகுதியில்தான் மாகாளி நதியின் மூலம் இருப்பதாக நேபாள அரசு கூறிவருகிறது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் இந்தியா லிம்பியாதூரா மற்றும் லிபுலேக் ஆகிய பகுதிகளுக்கு கிழக்கேதான் அந்த நதி உருவாவதாகவும் அது இந்தியாவின் எல்லை எனவும் இந்தியா கூறிவருகிறது. 

Nepal external afire minister asking why not India talk with Nepal

இதற்கிடையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இந்தியாவின் எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில் அதில் காலாபானி, லிபுலேக், லிம்பியாதூரா ஆகிய பகுதிகள் இந்திய எல்லைக்குட்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நேபாளம் அவசரகதியில் புதிய எல்லை வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா தனது எல்லைப்பகுதி என கூறியுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று பகுதிகளும் நேபாளத்துக்கு சொந்தமானது எனவும் அந்நாட்டின் பிரதமர் கே.பி ஷர்மா ஓலி உரிமை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் புதிய அரசியல் வரைபடம்  தொடர்பான சட்ட திருத்தத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்அவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் எம்பிகள் அதனை வரவேற்றுள்ளனர். அந்நாட்டு அதிபர் தேவி பந்தாரி ஒப்புதல் அளித்தபின் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என நேபாளம் கூறிவருகிறது. இந்நிலையில் இந்தியா இந்த விவகாரத்தில் எந்த பதிலும் அளிக்காமல் இருந்துவருவதால், அது நேபாள அரசை கொந்தளிப்படைய வைத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நேபாள வெளியுறவு துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி, தற்போது நேபாள அரசு கொண்டுவந்துள்ள அரசியல் வரைபட சட்டதிருத்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

Nepal external afire minister asking why not India talk with Nepal

அது இனி மாற்றத்துக்குரியது அல்ல,  நிரந்தரமாக இருக்கப்போகிறது, எதிர் காலத்திலும் எந்த மாற்றத்திற்கும் அதில் இடமில்லை எனவும், அடுத்த வாரத்திற்குள் அனைத்து நாடாளுமன்ற செயல்முறைகளும் முடிவடையும் எனவும், அரசியலமைப்பின் முறையான திருத்தம் நடைபெற்று இது ஜனாதிபதியால் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் எனவும் கியாவாலி கூறியுள்ளார். மேலும், நவம்பர்-2 2019 அன்று ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பின்போது இந்தியா தனது வரைபடத்தில் மாற்றங்களை செய்த பின்னர், அதில் தங்கள் நாட்டு பகுதிகளையும் இணைத்துக்கொண்டது என்ற அவர், எல்லை வரைபடத்தில் நேபாளத்தின் முடிவு நிரந்தரமானது, ஏனெனில் அப்பகுதிகள் நேபாளத்திற்கு சொந்தமான பகுதி என்றும்,  இருப்பினும் எந்தப் பகுதி நேபாளத்தை சேர்ந்தது என்பதை முறையாக அங்கீகரிக்க இருநாடுகளுக்கும் இடையே ஒரு உரையாடல் தேவைப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.  மேலும், பாராளுமன்றத்தால் ஒருமுறை தீர்மானிக்கப்பட்ட முடிவை மாற்ற முடியாது என்றாலும் அதில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இருதரப்பிலும் வழிகள் உள்ளன. வெளியுறவு செயலாளர்கள் அளவிலான சந்திப்பு தொடங்குவது தொடர்பாக இந்திய தரப்பிற்கு நாங்கள் எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை, இருப்பினும் 2 தூதரகங்களும் தொடர்பில் உள்ளன. 

Nepal external afire minister asking why not India talk with Nepal

இதில் முறையான தகவல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என தெரிவித்த வெளியுறவு அமைச்சர்  கியாவாலி, நேபாள அரசின் வெளியுறவு செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏன் இந்தியா தயங்குகிறது.? covid-19 தொற்று நோய்களுக்கு மத்தியிலும் எல்லை பிரச்சனைகளை தீர்க்க சீனா போன்ற பிற நாடுகளுடன் இந்தியா பேச முடியும் என்றால், ஏன் காத்மாண்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.?  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான ராணுவ தளபதிகள் ஒன்றாக அமர்ந்து எல்லை பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதை நாம் சமீபத்தில் பார்க்கிறோம், அது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்க முடியும் என்றால், அது ஏன் எங்கள் தேசத்துடன் நடக்கக்கூடாது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நேபாளத்தின் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் சீனா உள்ளதாக  கூறப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தெற்காசியாவில்  காலனித்துவப்படுத்தப்படாத ஒரே நாடு நேபாளம் மட்டும்தான், எங்களுடைய அண்டை நாடான இந்தியா மற்றும் சீனாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது, இந்தியா-சீனாவுடனான எங்கள் அணுகுமுறைகளை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் எந்த வித்தியாசமும் தென்படாது என அவர் கூறியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios