மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. 3,408 பேர் காயமடைந்துள்ளனர். 139 பேரை காணவில்லை என ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
Myanmar Earthquake Death Toll Rises: மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. 3,408 பேர் காயமடைந்துள்ளனர். 139 பேரை காணவில்லை என ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று மத்திய மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கட்டடங்களை தரைமட்டமாக்கியும், உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியும், ஆயிரக்கணக்கானோரை வீடுகளை விட்டு வெளியேற்றியும் பெரும் அழிவை ஏற்படுத்தியது.
மியான்மர், தாய்லாந்து மற்றும் சீனாவின் யுன்னான் மாகாணம் வரை இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த உயரமான கட்டிடம் இடிந்து விழுந்தது. மண்டலே மற்றும் அதைச் சுற்றியுள்ள டவுங்கு, ஆங்பான் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், சேதத்தின் முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை.
சர்வதேச உதவி மற்றும் மீட்பு
இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா மருத்துவக் குழுக்கள், நிவாரணப் பொருட்கள் மற்றும் அவசரகால பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளது. சீனா மீட்புப் பணியாளர்கள் மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. தாய்லாந்தும் மருத்துவக் குழுக்களை அனுப்பி பிராந்திய உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
1,000+ கடந்த பலி எண்ணிக்கை; 2,376 பேர் காயம் - மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட துயரம்
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று மியான்மர் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹிலைங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மருக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியா மியான்மர் மக்களுடன் துணை நிற்கிறது
"மியான்மர் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹிலைங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். நெருங்கிய நண்பன் மற்றும் அண்டை நாடாக, இந்த கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் துணை நிற்கிறது," என்று மோடி எழுதினார்.
இந்தியா ஏற்கனவே மியான்மருக்கு நிவாரண உதவிகளையும், அவசர உதவிகளையும் அனுப்பத் தொடங்கியுள்ளது. 1,600க்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த நிலநடுக்கம், பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச ஆதரவுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்திற்கான காரணம் என்ன?
இந்திய மற்றும் யூரேசிய தட்டுகளுக்கு இடையிலான டெக்டோனிக் எல்லையான சாகைங் பிளவு பகுதியில் ஏற்பட்ட நகர்வு காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் உராய்வதால் இப்பகுதியில் அடிக்கடி அதிக அளவு நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள் மேற்பரப்பில் ஆற்றல் குவிவதால் அதிக அழிவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரேசிலுக்குச் செல்லும் SU-57 போர் விமானம்! ரஷ்யாவின் வியூகம் என்ன?
