காசா எல்லையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 260 பேர் சடலங்களாக மீட்டுள்ளனர் என இஸ்ரேல் நாட்டின் ஷாகா மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காசா நகருக்கு அருகே இஸ்ரேல் பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த 260 பேர் சடலங்களாக மீட்டுள்ளனர் என இஸ்ரேல் நாட்டின் ஷாகா மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமை காலை முதல் பல பகுதிகளிலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பைக், கார்கள் மற்றும் பேரா க்ளைடர்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இந்த திடீர் தாக்குதல் ஈடுபட்டனர். அவர்கள் போன இடங்களில் கண்டவர்களை எல்லாம் தாக்கிக் கொன்று குவித்துள்ளனர்.

விடுமுறை நாள் முடிவைக் குறிக்கும் வகையில் யூதர்கள் கொண்டாடும் இசை விழாவில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் இஸ்ரேலியர்கள். இந்த இசை விழாவில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின் வீடியோக்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைராகி வருகின்றன.

ட்விட்டரில் பகிரப்பட்டுவரும் ஒரு வீடியோவில், இசை விழா நடைபெறும் இடத்தை நோக்கி ஏவுகணைகள் பறந்து வருவதையும், இசை நிகழ்ச்சியைக் காண வந்ததவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்ததைக் கண்டு பயந்து ஓடும் காட்சியையும் காணமுடிகிறது.

பயங்கரவாதிகள் இசை ரசிகர்களைச் சுற்றி வளைத்து, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதுமட்டுமின்றி, சாவுக்கு பயந்து அந்தப் பகுதியில் மறைந்திருந்தவர்களையும் தேடிப் பிடித்து வேட்டையாடினர் என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை உடனடியாக பதிலடி கொடுத்தது. பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள இடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் காரணமாக,காசா நகரில் 426 இடங்களில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 313 பேர் கொல்லப்பட்டனர். 1,800 பேர் காயம் அடைந்தனர்.

இஸ்ரேலின் பதிலடிக்கு அஞ்சி காசாவில் இருந்து சுமார் 20,000 பாலஸ்தீன மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, ஐ.நா. பள்ளிக்கூடங்களுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் முழு பலத்தையும் பயன்படுத்தி, காசா நகரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருக்கும் எல்லா இடங்களையும் அழிப்போம். இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கும்" என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.