அமெரிக்காவில் வால்மார்ட் மேலாளர் ஊழியர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு!!
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செவ்வாய்கிழமை பிற்பகலில் வால்மார்ட் மேலாளர் ஒருவர் ஊழியர்கள் நோக்கி காட்டுமிராண்டித்தனமாக சுட்டதில் பலர் உயரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சாம்ஸ் சர்க்கிளில் உள்ள வால்மார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை செசபீக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் இறந்துவிட்டார்" என்று செசபீக் நகரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. முதல் கட்ட தகவலின்படி வால்மார்ட்டில் பணியாற்றி வந்த மேலாளர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து செசபீக் காவல் துறை அதிகாரி லியோ கோசின்ஸ்கி முன்பு கூறுகையில், ''ஒருவர் மட்டுமே துப்பாக்கி சுடு நடத்தி இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம், அந்த ஒருவரும் இறந்துவிட்டார்" என்று தெரிவித்து இருந்தார்.
துப்பாக்கிச் சூடு குறித்து கவலை தெரிவித்து இருக்கும் வெர்ஜீனியா செனட் உறுப்பினர் லூயிஸ் லூகஸ், ''எனது மாவட்டமான செசபீக்கில் உள்ள வால்மார்ட்டில் நடந்து இருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் நான் முற்றிலும் மனம் உடைந்துள்ளேன். பல உயிர்களைக் காவு வாங்கிய துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்தை நாட்டில் இருந்து ஒழிக்கும் வரை ஓயப் போவதில்லை'' என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.