Narendra Modi will hold talks with President Donald Trump on June 26 on a range of issues

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விடுத்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி வரும் 25, 26-ந்தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அந்த நாட்டு அதிபரை சந்தித்து மோடி பேசவுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது பிரதமர்் மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இரு தலைவர்களும் சந்திப்பதற்கான தேதியை இறுதி செய்யும் பணியில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்கள் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், இம்மாதத்தின் கடைசி வாரத்தில் அதாவது, வரும் 25,26 தேதிகளில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இம்மாதம் 25,26 தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். அங்கு 26-ந்தேதி இரு தலைவரும் சந்திப்பு பேச்சு நடத்த உள்ளனர்.இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் முதல் சந்திப்பு இதுதான். இரு நாட்டு தலைவர்கள் இடையிலான இந்த சந்திப்பு, இரு நாட்டு நலன்கள் தொடர்பான விசயத்தில் புதிய பாதையை உருவாக்கும். இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலிமைப்படுத்தும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றபின், 3 முறை தொலைபேசியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்தியாவுக்கு அதிகமான ஆயுதங்கள் சப்ளை செய்யும் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதில் இந்தியாவுக்கு ஆள்இல்லாத விமானங்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையே பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்த அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாரீஸ் ஒப்பந்தம் அதிக சலுகை காட்டுவதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளை தீர்ப்பதற்கும் தீவிரவாதம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கவும், குறிப்பாக எச்1 பி விசா வழங்குவதில் இந்தியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு விதித்துள்ளது. இதனால், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன, இந்த பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்க இந்த சந்திப்பு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.