இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு 170 இந்தியர் மோடி ஏர்வேஸ் என்று பெயரிடப்பட்ட தனி விமானத்தில் வந்தடைந்தனர்.
பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மதியம் ஆஸ்திரேலியா வந்தார். இவரை சந்திப்பதற்கு ஆஸ்திரேலியா வாழ் இந்திய வம்சா வழியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மெல்போர்னில் வசிக்கும் இந்தியர்கள் 170 பேர் தனி விமானம் பிடித்து இன்று காலை சிட்னி வந்தடைந்துள்ளனர். இந்திய ஆஸ்திரேலிய புலம்பெயர்ந்தோர் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் மூன்று வண்ணத்தில் தலைப்பாகைகளை அணிந்து, தேசியக் கொடிகளை அசைத்தவாறு "மோடி ஏர்வேஸ்" என்று பெயரிட்ட விமானத்தில் நடனமாடினர்.
"எங்கள் பன்முக கலாச்சார சமூகத்தின் முக்கிய பகுதியான" ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தை கொண்டாடுவதற்காக சிட்னியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய ஆஸ்திரேலிய புலம்பெயர்ந்தோர் அறக்கட்டளையின் இணை நிறுவனர் டாக்டர் அமித் சர்வால் கூறுகையில், "நிறைய மக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே காத்திருக்கிறார்கள், அங்கு அவர்கள் பிரதமர் மோடியை உற்சாகப்படுத்துவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்திக்கிறார்.
நேற்று பப்புவா நியூ கினியாவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிட்னிக்கு மோடி வந்திருந்தார். பப்புவா நியூ கினியாவில் பிரதமர் ஜேம்ஸ் மராப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர்.
பிரதமர் மோடி ஜப்பானில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அங்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பைத் தொடர்ந்து ஜி 7 மாநாட்டில் மூன்று அமர்வுகளில் கலந்து கொண்டார். ஹிரோஷிமாவில் நடந்த 3வது குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசி இருந்தார்.
