நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் தயாரிக்‍கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் கடந்த 2011-ம் ஆண்டு பதவியேற்றார். இவர், உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறார். இவரது நடவடிக்கைக்கு, உலக நாடுகளின் கண்டனம் வலுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, கிம் ஜாங் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்‍கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். கிம் ஜாங்கின் இந்தத் தகவலை, தென்கொரியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து, வடகொரியாவின் நடவடிக்கையை, கூர்ந்து கவனித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதனிடையே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.