#UnmaskingChina: முரட்டுத்தனமான அணுகுமுறை..!! சீனாவை எகிறி பாய்ந்து அடித்த அமெரிக்கா..!!
சீன மக்கள் விடுதலை ராணுவம், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடன் திட்டமிட்டே எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. வீரர்கள் உயிரிழந்ததற்கு நேற்று அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீனா மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சீனாவின் அராஜகச் செயலுக்கு பல நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி, சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர்.
அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 35 சீனர்கள் கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா இதுவரை அதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சித்தரும் தகவல் ஒன்றை அது வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு லடாக் எல்லைப்பகுதியான கால்வான் முழுவதும் சீனாவுக்கு சொந்தமெனவும், அதில் இந்தியா சாலைகட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் சீனா தடாலடியாக கூறியுள்ளது. தனக்குள்ள நாடு பிடிக்கும் எண்ணத்தை சீனா அறிக்கையின் வாயிலான அப்பட்டமாக வெளிபடுத்தியுள்ளது. ஏற்கனவே வீரர்களை இழந்த கோபத்தில் உள்ள இந்தியாவுக்கு சீனாவின் இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனர்கள் தாக்கியதில் இந்திய ராணுவத்தினர் உயிரிழந்ததற்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்திருந்தது, அது மட்டுமல்லாமல் அந்நாட்டின் மூத்த செனட் உறுப்பினர்கள் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கையை பாராட்டியதுடன், இந்தியாவை சீனாவால் மிரட்ட முடியாது என கூறி தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சீனா தனது சுற்றுப்புறத்தில் உள்ள அண்டை நாடுகளுடன் முரட்டுத்தனமான அணுகுமுறைகளை கையாண்டுவருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
டென்மார்க்கில் கோபன்ஹேகனில் நடைபெற்ற ஜனநாயகம் குறித்த ஆன்லைன் மாநாட்டின்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், சீன மக்கள் விடுதலை ராணுவம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடன் திட்டமிட்டே எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அது தென்சீனக் கடலை இராணுவ மயமாக்கி உள்ளது, மேலும் அங்கு சட்டவிரோதமாக அங்குள்ள தீவுகளை உரிமைகோரி வருகிறது. முக்கிய கடல் பாதைகளை அச்சுறுத்துகிறது, மேலும் ஐ.நா பதிவுசெய்துள்ள ஒப்பந்தங்களையும், அதன் குடிமக்களின் உரிமைகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மீறிவருகிறது. அதன் சர்வாதிகார மனப்பான்மை ஹாங்காங்கின் சுதந்திரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார். சீனா முறித்த பல சர்வதேச ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று என கூறிய அவர், வர்த்தகம் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை சீனா தவறாக பயன்படுத்தி வருகிறது என சாடினார். சீன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், ஹாங்காங்கின் உரிமை பறிப்பு மற்றும் தென்சீனக் கடலில் சீன உற்பத்தியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவும் சீனாவும் முரண்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த கருத்து சர்வதேச அளவில் சீனாவை தனிமைப்டுத்தும் முயற்சியின் அடையாளமாக கருதப்படுகிறது.