இந்தியாவில் 13,000 கோடி மோசடி; தப்பி ஓடிய மெகுல் சோக்சியை பாதுகாக்கும் ஆன்டிகுவா; சிபிஐக்கு பின்னடைவு!!
இந்தியாவில் 13,000 கோடி அளவிற்கு வங்கியில் நிதிசெய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது.
ஆன்டிகுவா சிவில் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், ''அட்டார்னி ஜெனரல் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு முழுமையான விசாரணை நடத்த வேண்டிய கடமை உள்ளது. தான் மனிதாபிமானமற்ற அல்லது இழிவான அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படும் சூழல் உள்ளது'' என்று மேகுல் சோக்சி தரப்பில் வாதிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மே 23, 2021 அன்று ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட வேண்டும், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளிலும் இருந்து தனக்கு நிவாரணம் வேண்டும் என்று மேகுல் சோக்சி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விசாரணையை அடுத்து, ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுதான் அவரை நாடு கடத்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பைப் குண்டு வீச்சு; நூலிழையில் உயிர் தப்பினார்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி அளவிற்கு கடன் பெற்று திருப்பி செலுத்தாத வகையில், மெகுல் சோக்சியை இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தேடி வருகிறது. இவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை விட்டு தப்பி ஓடிய மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வந்து கிரிமினல் வழக்குகளை தொடர வேண்டும் என்று சிபிஐ கூறி வருகிறது.
இதுதொடர்பாக சிபிஐ வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''இந்தியாவில் பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். அந்தந்த நாட்டின் சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த 15 மாதங்களில் மட்டும் இந்தியாவால் தேடப்படும் 30 குற்றவாளிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். கடந்த 2018, பிப்ரவரி 15 ஆம் தேதி மெகுல் சோக்சி மீது குற்ற வழக்கு பதியப்பட்டது'' என்று தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி, வங்கி மோசடி மற்றும் நிதிநிறுவன மோசடி தொடர்பாக மெகுல் சோக்சி மீது மேலும் ஐந்து வழக்குகளை 2022 ஆம் ஆண்டில் சிபிஐ பதிவு செய்து இருந்தது. முன்னதாக, 2018ஆம் ஆண்டில் தனக்கு எதிராக ரெட் நோட்டீஸ் வெளியிடக் கூடாது என்று இன்டர்போல் அறிக்கைகளை கையாண்டு வரும் கமிஷனுக்கு மெகுல் சோக்சி கடிதம் எழுதி இருந்தார். இவருக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வெளியிட்டு இருந்தும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த நோட்டீசை இன்டர்போல் திரும்பப் பெற்றது. இது சிபிஐ விசாரணைக்கு பின்னடைவாக அமைந்து இருந்தது. இந்த நிலையில்தான், தற்போது அவரை நாடு கடத்தவும் ஆன்டிகுவா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
#Breaking: இந்தோனேசியாவின் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோளில் 7.0 ஆக பதிவு!!