பெண் ஊழியருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ட்சின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர் பரூக் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல உணவகம் மெக்டொனால்ட்ஸ். இதற்கு உலகம் முழுவதிலும் பல கிளைகள் உள்ளன. இதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் (52) செயல்பட்டு வந்தவர். மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் விதிகளின்படி, உயர் பதவி வகிப்பவர்கள், அங்கு பணிபுரியும் ஊழியருடன் காதலில் ஈடுபடுவது, சேர்ந்து வசிப்பது, திருமணம் செய்துகொள்வது போன்ற எந்தவிதத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாக தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என விதிமுறை இருந்து வருகிறது. 

ஆனால், இவற்றையெல்லாம் மீறி தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர் பரூக் அந்நிறுவனத்தின் பெண் ஊழியருடன் தவறான உறவில் இருந்ததாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும், புகார் எழுந்தது. இது நிறுவனத்தின் விதிமுறைக்கும், கொள்கைக்கும் புறம்பானது என்றும், இது மோசமான முன்னுதாரணமாக இருக்க கூடாது எனவும் கூறி அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதன்பின்னர் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ் கெம்ப்ஸ்சின்ஸ்கை நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான ஈஸ்டர் ப்ரூக் பெண்  ஊழியருடனான உறவை ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் தனது உறவு நிறுவனத்தின் கொள்கையை மீறும்வகையிலான ஒரு தவறு என்றும். நிறுவனம் எடுத்த முடிவுக்கு உடன்படுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.