வெளியானது அதிகம் தடை செய்யப்பட நாடுகளின் பட்டியல்... ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!!
உலகில் அதிகம் தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் இருப்பதாக கேஸ்டெலம்.ஏஐ (Castellum.AI) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் அதிகம் தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் இருப்பதாக கேஸ்டெலம்.ஏஐ (Castellum.AI) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் பல உயிர்களும் பறிப்போயின. இந்த போதிலும் போர் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதை அடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது.
அதன்படி உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. இதனிடையே ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் பறக்க வான்வெளி தடை விதித்துள்ளன. அந்நாடுகளின் பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு வர்த்தக தடைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் உலக அளவில் அதிக தடை செய்யப்பட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு 2 ஆயிரத்து 778 தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 8 நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்துள்ளன. இதில் அதிகபட்சமாக சுவிட்சர்லாந்து 569 தடைகளும் ஐரோப்பிய ஒன்றியம் 518 தடைகளையும், பிரான்ஸ் மட்டும் தனிப்பட்ட முறையில் 512 தடைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவை பொறுத்தவரை உக்ரைன் மீதான போருக்கு பிறகு 243 தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மீது அதிக தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா மட்டும் இதுவரை ரஷ்யா மீது ஆயிரத்து 194 தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷ்யாவை தொடர்ந்து அதிக தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் இரண்டாம் இடத்திலும் அதை தொடர்ந்து சிரியா மற்றும் வடகொரியா நாடுகளும் அதிகம் தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கேஸ்டெலம்.ஏஐ (Castellum.AI)) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.