இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. 

வழக்கத்திற்கு மாறாக பின்னிரவு ஏவுகணையை சோதனையை வடகொரியா நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வடகொரியா தனது கிழக்கு கடற்கரை பகுதியில்  ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், ஜப்பான் நாட்டின் கடல் எல்லையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

வடகொரியாவின் இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடியது என்று அமெரிக்கா, தென்கொரிய கூறியுள்ள போதிலும்,  இது குறைந்த அளவிலான தூரம் சென்று தாக்கக் கூடியது என்று ரஷ்யா கூறியுள்ளது.

இதற்கிடையில், ஒட்டு மொத்த அமெரிக்காவும் வடகொரியாவின் தாக்குதல் இலக்குக்குள் வந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாகவும் ஏவுகணையை உருவாக்கியவர்களை அவர் பாராட்டியதாகவும் வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா தென் கொரியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.வின் பொது செயலாளர் ஆண்டான்யோ குட்ரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்த செயல் கொரியா கடல் பகுதியில் மேலும் பரபரப்பான சூழலுக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.