kim jong un north korean: அணு ஆயுதத்தால் அழித்துவிடுவோம்: தென் கொரியாவுக்கு வடகொரிய அதிபர் தங்கை எச்சரிக்கை
Kim Jong Un sister: வடகொரியா போரை எதிர்க்கிறது ஆனால், தென் கொரியா எங்களைத் தாக்கினால், நாங்கள் அணு ஆயுதத்தால் அவர்களை அழித்துவிடுவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்கின் தங்கை கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியா போரை எதிர்க்கிறது ஆனால், தென் கொரியா எங்களைத் தாக்கினால், நாங்கள் அணு ஆயுதத்தால் அவர்களை அழித்துவிடுவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்கின் தங்கை கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பரம எதிரிகள்
கொரியா முழுவதையும் தங்கள் காலடியில் கொண்டுவருவதற்கு வடகொரியாவும், தென் கொரியாவும் முயன்றன. இதனால் வெடித்த போர்தான் கடந்த 1950 முதல் 1953ம் ஆண்டுவரை நடந்த கொரியப்போராகும். இந்தப் போருக்கு வடகொரியாவுக்கு ஆதரவாக சீனாவும், சோவியத் யூனியனும், தென் கொரியாவக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கின. இரு கொரிய நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டாலும் தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. அப்போதிருந்து இரு நாடுகளும் எதிரிகளாகவே இருக்கின்றன.
ஆயுத பரிசோதனை
இதில் வடகொரியா ஐ.நா.வின் எச்சரிக்கையை மீறி அவ்வப்போது அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்து தென் கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்கிற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
தென் கொரிய அமைச்சர்
இந்நிலையில் தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சூ ஊக் கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் ராணுவத் தளவாடங்களைப் பார்வையிட்டார். அப்போது ராணுவத்திடம் இருந்த ஏராளமான ஆயுதங்கள், ஏவுகணைகள், நவீன தொழில்நுட்பம் கொண்டஏவுகணைகள், துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்கள் போன்றவற்றை பார்வையிட்டார்.
அப்போது சூ ஊக் கூறுகையில் “நம்முடைய ஆயுதங்கள் நவீனமானவையாக இருக்கின்றன. துல்லியமாகவும் விரைவாகவும் வடகொரியாவின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும்” எனத் தெரிவித்தார்
கண்டனம்
ஏற்கெனவே தென் கொரியாமீது கடும் கோபத்திலும், அவ்வப்போது தென் கொரிய கடற்பகுதிக்குள் ஏவுகணைகளை பரிசோதிக்கும் வடகொரியாவுக்கு அமைச்சர் பேசியது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வடகொரிய அதிபர் கிம் ஜான், உயர் அதிகாரிகள் தென் கொரிய அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், ஏதாவது ஆபத்தான ராணுவ நடவடிக்கையை தென் கொரியா எடுத்தால், சியோல் நகரில் உள்ள முக்கிய நகரங்களை வடகொரியா அழித்துவிடும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அழித்துவிடுவோம்
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கின் தங்கையும், அதிபருக்கு ஆலோசனைக் குழுவில் உறுப்பினரான கிம் யோ ஜாங் அளித்த பேட்டியில், “ தென் கொரிய அமைச்சர் ஊக் அணு ஆயுதம் கொண்ட எங்களைத் தாக்குவது குறித்து ஆலோசித்து மிகப்பெரிய தவறு செய்திருக்கிறார். ஒருவேளை தென் கொரியா எங்கள் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், எங்களின் அணு ஆயுதப்படை தென் கொரியாவை உருத்தெரியாமல் அழித்துவிடும்.
எங்களின் இருக்கும் அணு ஆயுதம் எங்களின் பாதுகாப்புக்குத்தான். எங்களுடன் ராணுவ நடவடிக்கையை யாரேனும் நிகழ்த்தினால், எங்கள் ராணுவம் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும். தென் கொரியா மிகப்பெரிய அழிவைச் சந்திக்க வேண்டியதிருக்கும்” எனச் எச்சரித்துள்ளார்.