வல்லரசு நாடான அமெரிக்காவையே அலறவிட்ட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலைகுறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், சீன மருத்துவர் குழு ஒன்று கொரியா சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரும்புத்திரை என அறியப்படும் வட கொரியாவில், என்ன நடக்கிறது என்பது அருகில் இருக்கும் சீனா, தென் கொரியாவுக்குக்கூட தெரியாது. அந்த அளவுக்கு அங்கிருந்து காற்றுகூட வெளியேறாதபடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மொத்த உலகத்தையும் திணறடித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், வட கொரியாவில் பரவவில்லை என அந்நாடு கூறுகிறது. இருந்தும், இதை இதுவரை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த 15- ஆம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் இந்த விழாவில் அவர் பங்கேற்காதது இதுவே முதன்முறையாகும். ஆனால், இதை தென்கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இப்போது அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்தது. 

இந்நிலையில், கிம் ஜாங் உன்னின் உடல்நிலையைப் பரிசோதிக்க, திறமை வாய்ந்த ஒரு மருத்துவ நிபுணர் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ளது. தற்போது கிம் ஜாங் உன்னின் உடல் நிலை தொடர்பான தகவல் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், அதில், சீனாவின் ஈடுபாடு குறித்த செய்தி வெளியாகியுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே,'#KIMJONGUNDEAD' என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.