வடகொரிய அதிபர்  கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், இவற்றிற்கு தென்கொரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

அணு ஆயுத சோதனை, ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை அலறவிட்டு வந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். இந்நிலையில், வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு பீதியை ஏற்படுத்தினர். 

மேலும், ஜப்பான் ஊடகம் ஒன்று வடகொரியாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றபோது திடீரென கிம் ஜாங் உன் நெஞ்சுவலியால் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கிம் ஜாங் உன்னுக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது சாதாரண ஸ்டண்ட் பொருத்தும் செயல்முறையின் போது மருத்துவரின் கை நடுங்கியதால், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் கோமாவில் இருக்கலாம் என்றும் அதில் தெரிவித்திருந்தது. கிம் ஜாங் உன் குறித்த பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், இவற்றை ஆரம்பித்தில் இருந்தே தென்கொரியா திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் உயிருடன் தான் இருக்கிறார் என்று அண்டை நாடான தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்-னின் வெளியுறவு செயலாளர் சங் இன் மூன் கூறுகையில், கிம் ஜாங் உன் வடகொரியாவின் வோன்சானில் இருக்கும் தன்னுடைய கடற்கரை விடுதியில் தங்கி இருக்கிறார். அவர் கடந்த 13-ம் தேதி முதல் அங்கு தங்கியிருக்கிறார். சந்தேகத்துக்கு இடமான எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.

அண்மையில் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று கிம்மிற்கு சொந்தமான ரயில் கடற்கரை நகரத்தில் இருப்பதாக செய்தி வெளியானது. தற்போது தென் கொரியாவும் அதையே தெரிவித்து இருப்பதால் கிம் தற்போது உயிருடன் இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.