வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சைக்குப்பின் உணர்வற்று, மூளைச்சாவு அடைந்துவிட்டதாக ஜப்பானிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், #KIMJONGUNDEAD'என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் இந்த விழாவில் அவர் பங்கேற்காதது இதுவே முதன்முறையாகும். ஆனால், இதை தென்கொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இப்போது அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்தது. இந்த செய்தியின் அடிப்படையில் அதிபர் கிம் உடல்நலம் பெற வாழ்த்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், பின்னர் கிம் தொடர்பான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள், அதிபர் கிம் வோன்சான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் பயன்படுத்தும் விமானம் தலைநகர் யாங்யாங்கில்தான் இருக்கிறது எனத் தெரிவிக்கின்றன. இதற்கிடையே வடகொரியா குறித்து ஆய்வு செய்து வரும் 38நார்த் எனும் இணையதளம், அதிபர் கிம் உடல்நிலை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் தலைநகர் யாங்யாங்கில் இல்லை. வேறு இடத்தில் தங்கியுள்ளார். அவர் தங்கியுள்ள இடத்தில்தான் அவர் பயன்படுத்தும் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

ஆனால் அதிபர் கிம் இதய அறுவை சிகிச்சை செய்தபின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதை ஜப்பான் ஊடகங்களும், சிஎன்என் செய்தியும் தொடர்ந்து தெரிவி்த்து வருகின்றன. அதிபர் கிம் உணர்வற்ற நிலைக்கு சென்றதால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர சீனாவின உதவியை வடகொரியா கோரியுள்ளது. இதன்படி மருத்துவ வல்லுநர்கள் குழுவை வடகொரியாவுக்கு சீனா அனுப்பி வைத்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், #KIMJONGUNDEAD'என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.