Asianet News TamilAsianet News Tamil

குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை சதி தீவிரமானது: அமெரிக்கா!

அமெரிக்க குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னூவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட பிரச்சினை தீவிரமானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது

Khalistani terrorist Gurpatwant Singh Pannun murder plot is very serious says US smp
Author
First Published Dec 1, 2023, 10:10 AM IST

நீதிக்கான சீக்கியர்கள் எனும் காலிஸ்தானி அமைப்பை வழிநடத்தும் குர்பத்வந்த் சிங் பன்னூ என்பவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவரிடம் கனடா நாட்டின் குடியுரிமையும் இருப்பதாக கூறப்படுகிறது. கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருடன் குர்பத்வந்த் சிங் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட குர்பத்வந்த் சிங் பன்னூனை கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாதியாக அறிவித்தது.

இந்த நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா மற்றும் சிலருடன் சேர்ந்து இந்திய அரசு ஊழியர் ஒருவர் பணியாற்றியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தி நிகில் குப்தாவை அமெரிக்கா கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மன்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அடையாளம் காணப்படாத இந்திய அரசு ஊழியர் (சிசி-1 என்று பெயரிடப்பட்டவர்), கொலை செய்வதற்காக கொலைகாரர் ஒருவரை நிகில் குப்தா என்ற இந்தியக் குடிமகன் மூலம் நியமித்ததாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது. சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூ கொலை முயற்சி அமெரிக்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட பிரச்சினை தீவிரமானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இந்தியாவுடனான தனது மூலோபாய கூட்டாண்மையை அமெரிக்கா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மறுபுறம், முறியடிக்கப்பட்ட கொலை சதியில் இந்தியர் மீது அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.” என தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை: முன்னாள் தூதர்!

எங்களுடன் இந்தியா ஒரு மூலோபாய பங்காளியாக உள்ளது. இந்தியாவுடனான அந்த மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்ற உள்ளோம் என செய்தியாளர் சந்திப்பின்போது ஜான் கிர்பி கூறினார். அமெரிக்காவில் நடந்த கொலைச் சதித்திட்டத்தில் இந்திய நாட்டவர் மீது அமெரிக்க நீதித் துறை குற்றச்சாட்டைப் பற்றி பேசிய அவர்,  “நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் இந்த விசாரணையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.” என்றார்.

மேலும், “இப்பிரச்சினை தொடர்பாக விசாரிப்பதாக இந்தியாவும் அறிவித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தக் குற்றச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் முறையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.” என்றும் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

முன்னதாக, குர்பத்வந்த் சிங் பன்னூ கொலை சதி குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios