இஸ்ரேல் நாட்டின், ஜெருசேலம் நகரில் உள்ள புனித செபுல்கேர் தேவாலயத்தில் (இயேசு உயிர்தெழுந்த இடம்) இருக்கும் இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்ட கல்லறையின் மேல் மூடப்பட்டு இருந்த பளிங்கு பலகை ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டது.

அதில் உள்ள பொருட்களைப் பார்த்து ஆய்வாளர்கள் வியந்துவிட்டனர். ஏறக்குறைய பல நூற்றாண்டுகளுக்கு பின், புனரமைப்புக்காக இந்த கல்லறையின் பலகை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஜியாகிரோபிக் சொசைட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த புனரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏதென்ஸ் நகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், இயேசு கிறிஸ்துவின் புதைக்கப்பட்ட இடம், கல்லறையை ஆய்வு செய்து வருகின்றனர். தலைமை அறிவியல் ஆய்வாளரும், மேற்பார்வையாளருமானஅன்டோனியா மொராபோலா தலைமையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

ஆய்வாளர் பிரடரிக் ஹீபெர்ட் கூறுகையில், “ இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்ட கல்லறை அமைந்துள்ள தேவாலயத்தில் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இயேசு கிறிஸ்து உடல் புதைக்கப்பட்ட கல்லறையின் மேல் மூடப்பட்டு இருந்த பளிங்கு பலகையை நாங்கள் அகற்றியபோது அதனுள் நிரப்பப்பட்டு இருந்த பொருட்களைப் பார்த்து வியந்துவிட்டோம்.

இது நீண்ட கால அறிவியல் ஆய்வாக இருக்கும். ஆனால், இறுதியாக நாங்கள் இயேசு கிறிஸ்து உடல் வைக்கப்பட்ட அந்த உண்மையான இடத்தைக் கண்டுபிடிப்போம்'' எனத் தெரிவித்தார்.

கிறிஸ்துவர்களின் மத நம்பிக்கையின்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தபின், அவரின் உடல் சுண்ணாம்புக்கல் குகையில் கிமு. 30 அல்லது கிமு 33ம் ஆண்டு புதைக்கப்பட்டு இருக்கலாம். கிறிஸ்துவர்களின் நம்பிக்கையின்படி, இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்டு 3 நாட்களுக்கு பின், மீண்டும் உயிர்தெழுந்து விண்ணுலகம் சென்றார் என்று நம்பப்படுகிறது.

இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்ட அந்த இடம்தான், குறிப்பாக அந்த கல்லறைதான் ‘எடிகுல்’ என அழைக்கப்படுகிறது. இந்த எடிகுல் அதாவது கல்லறை கி.பி.1808-1810 களில் தீவிபத்தால் பாதிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டது. அதன்பின் இப்போது புனரமைக்கப்படுகிறது.

இது குறித்து தலைமை அறிவியல் ஆய்வாளரும், மேற்பார்வையாளருமான அன்டோனியா மொராபோலா கூறுகையில், “ இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்ட கல்லறையை புதுப்பிக்கும் பணியில் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.  இந்த கல்லறை குறித்து ஆவணப்படுத்த நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மூலம், இந்த உலகம் பல விஷயங்களை அறிய முடியும்'' எனத் தெரிவித்தார்.

இயேசு உயிர்தெழுந்த தேவலாயம் எனச் சொல்லப்படும் தி செபில்கர் சர்ச் தற்போது 6 கிறிஸ்துவ பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கிரீஸ் வைதீக திருச்சபை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அர்மீனியன் வைதீக திருச்சபை, கோப்டிக், எத்தியோப்பின் வைதிக திருச்சபை, சிரியா சமூகம் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.