இந்தியா அமெரிக்காவின் சிறந்த நண்பன் என தெரிவித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  ராபர்ட் ஓ பிரையன், கிழக்கு லடாக்கில் இந்திய சிப்பாய்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல் மற்றும்  தென் சீனக் கடல் மற்றும் ஹாங்காங்கில் சீனாவில் ஆக்ரோஷமான நடவடிக்கைகள், சீனா எப்படிப்பட்ட சிந்தனைகொண்ட   நாடு என்பதை தெளிவாக காட்டுகிறது என கூறியுள்ளார். கடந்த மே-5 ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து இருநாடுகளும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகளை குவித்தன. இந்நிலையில் ஜூன்-15ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள்  உயிரிழந்தனர்.அதில் இந்தியாவும் சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததில் சீன தரப்பிலும் 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை வெளியிடவில்லை. 

அதைத்தொடர்ந்து  இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து, தற்போது பேச்சுவார்த்தையின் மூலம்  இரு நாடுகளும் படைகளை திரும்பப் பெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம்,  இந்தியா அமெரிக்கா உறவுகள் குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அப்போது ஒரு செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த பிரையன், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அமெரிக்காவின் சிறந்த நண்பன்,  பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சிறந்த  உறவைபாராட்டி வருகின்றனர். உண்மையில் கோவிட் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் நான் அதிபருடன் இணைந்து சென்ற கடைசிப் பயணம் இந்தியாவுக்குத் தான், இந்திய மக்கள் பற்றி எங்களுக்கு பெரும் வரவேற்பு எப்போதும் உள்ளது.  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவான ஒற்றுமைகள் நிறைய உள்ளன, அமெரிக்காவும் இந்தியாவும் மிகச்சிறந்த ஜனநாயக நாடுகள். 

இருநாடுகளும் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகள், இந்தியாவுடன் எப்போதும் வலுவான உறவை நாங்கள் பெற்றுள்ளோம், ஆனால்  இந்தியா மீதான சீனாவின் நடவடிக்கை தென்சீனக் கடலில் அதன் நடவடிக்கை போலவும், ஹாங்காங்கில் அது என்ன செய்கிறதோ அதை போலவும் உள்ளது. தைவானில் கொடுமைப்படுத்துதல், மிரட்டல் போலவே சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவுடனும் நடந்து கொண்டது. சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் அது எவ்வளவு கொடூரமான சிந்தனை கொண்டது என்பதை தெளிவாக காட்டுகிறது. 1.3 மில்லியன் சதுர மைல் நீளம் கொண்ட தென்சீனக் கடல் முழுவதையும் தனது பகுதி என சீனா கூறுகிறது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்பட்ட பகுதிகளில் செயற்கைத் தீவுகளை அமைத்து அதில் சீனா ராணுவ தளவாடங்களை நிறுத்திவருவது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என அவர் கூறியுள்ளார்.