நன்றி அருமை நண்பரே..! மோடியின் உதவியால் நெகிழ்ந்த இஸ்ரேல் பிரதமர்..!
இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாகவும் நன்றி
சீனாவில் தோன்றிய கொடிய கொரோனா வைரஸ் நோய் தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் 95 ஆயிரம் மக்கள் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதும் 49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்கிற அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அண்மையில் பரிந்துரை செய்யப்பட்டது. அது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடம் மருந்து ஏற்றுமதிக்காக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்ததால் அதில் சிக்கல் நிலவியது. இதனால் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நேற்றுமுன்தினம் இந்தியா நீக்கியது. இதையடுத்து வெளிநாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்வதில் இருந்த சிக்கல் நீங்கி இருக்கிறது.
இதனிடையே கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் இஸ்ரேல் நாட்டிற்கு மருந்துகள் இந்தியாவிலிருந்து அனுப்பி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று அவை இஸ்ரேலை சென்றடைந்தது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைத்ததற்கு பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், ’இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாகவும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.