Asianet News from Israel: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: நிலைமை எப்படி உள்ளது? ஏசியாநெட் நேரடி கள ஆய்வு!
இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு இடையே அங்குள்ள நிலவரம் குறித்து ஏசியாநெட் நேரடி கள ஆய்வு மேற்கொண்டுள்ளது
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மூண்டுள்ளது. 10ஆவது நாளாக இன்றும் தொடரும் போரில் இரு தரப்பிலும் 3000க்கும் மேற்படவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பணயக் கைதிகளாக பலரும் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மீட்டு வரப்படுகிறார்கள்.
இந்த சூழலில், இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு இடையே அங்குள்ள நிலவரம் குறித்து ஏசியாநெட் நேரடி கள ஆய்வு மேற்கொண்டது. ஏசியாநெட் சுவர்ணா செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர், இஸ்ரேல் நாட்டுக்கு நேரடியாக சென்று போர்க்களத்தில் இருந்து பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இஸ்ரேலில் விமானத்தில் இருந்து இறங்கியதும், தங்கள் குழந்தைகளை வரவேற்க ஏராளமான முதியோர்கள் அங்கு நிற்பதைக் கண்டேன். ஒரு கொடூரமான போரில் சிக்கியுள்ள ஒரு நாட்டிற்கு அவர்களின் குழந்தைகள் ஏன் சர்வதேச விமானத்தில் வருகிறார்கள் என்று என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. பெரியவர்களை வந்து அவர்களை வரவேற்க எது தூண்டியது? இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்ந்தபோது, கல்வி, பயணம் அல்லது வேறு பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இஸ்ரேலிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் இப்போது ஹமாஸுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்புவது தெரியவந்தது. அவர்களிடம் உற்சாகமும், உறுதியும் தெளிவாக தெரிந்தன.” என்கிறார்.
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் முழுவதும், பழிவாங்கும் முயற்சியில் உறுதியாக உள்ளதாக சுட்டிக்கட்டும் அஜித் ஹனமக்கனவர், “இந்த மோதலில் போர்வீரர்களாக முன்னோக்கிச் செல்ல இஸ்ரேலின் வீரர்கள் மற்றும் மக்கள் இருவரும் தயாராக உள்ளனர்.” என்றார். பெங்களூரிலிருந்து அபுதாபி சென்று அங்கிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றதாக கூறும் அஜீத், காசா எல்லையில் பதற்றம் நிலவிய போதிலும், தலைநகரில் இயல்பு வாழ்க்கையே இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
“'ஷாபத்' எனப்படும் ஓய்வு காலத்தை அனுசரிக்கும் மத பாரம்பரிய நிகழ்வை இஸ்ரேல் தலைநகரில் உள்ள மக்கள் அனுசரித்தனர். மக்கள் எப்போதும் போல இருக்கின்றனர். போரின் நிழலில் தொடர்ந்து வாழும் இங்கு வசிப்பவர்களுக்கு சைரன்களின் சத்தம் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. அதனால், சைரன்கள் ஒலித்த போதும், மக்கள் பெரிதாக அச்சமடைந்ததாக தெரியவில்லை.” என்று ஏசியாநெட் சுவர்ணா செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பதுங்கு குழிகள்
“ஹமாஸ் போராளிகளால் ஏவப்பட்ட ராக்கெட்டுகளுக்கு டெல் அவிவ் மீது தீங்கு விளைவிக்க போதுமான சக்தி இல்லாததே இதற்கு காரணமாக இருக்கலாம். பயங்கரவாதிகளால் இஸ்ரேல் குறிவைக்கப்படும் போது, நகரமெங்கும் சைரன்கள் ஒலிக்கப்படுகிறது. இதனால், விழித்துக் கொள்ளும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைகின்றனர். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் எங்கள் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகள் இருந்தன. மேலும் சைரன்கள் கேட்டவுடன் நாங்கள் அங்கு தஞ்சம் அடைய வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு 9:01 மணிக்கு சைரன்கள் ஒலித்தன. அனைத்து ஹோட்டல் அறைகளிலும் ஒலியை ரிலே செய்ய ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் சைரனைக் கேட்கும் வகையில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹோட்டல் ஜன்னல் வழியாக ஏவுகணையை நாங்கள் கவனித்தோம்.” என்று ஏசியாநெட் சுவர்ணா செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர்.
இஸ்ரேலில் ஒவ்வொருவரும் போர்வீரர்கள்
இஸ்ரேலின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு போர் வீரராக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டும் அஜித் ஹனமக்கனவர், “இஸ்ரேலின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் அந்த தேசத்தை அவர்களது வீடாக கருதுகின்றனர். எங்கள் விமானத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல விஷயங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இஸ்ரேலிய இளைஞர்களையும் பெண்களையும் நாங்கள் சந்தித்தோம். இஸ்ரேலின் போர்க்கால நிலைமைகள் பற்றி அறிந்தவுடன், ராணுவத்திற்கு ஆதரவளிக்க அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
விமான நிலையத்தில், முதியவர்கள், தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு, வெளிநாட்டில் இருந்து ராணுவத்தில் சேருவதற்காகத் திரும்பும் தங்கள் குழந்தைகளின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளை நாங்கள் கண்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தாக்குதல் நடத்திய இடம்
எங்கள் பயணம் டெல் அவிவிலிருந்து 55 கி.மீ தொலைவில் அஷ்கெலோன் நகரத்தை சென்றடைந்தது. இந்த இடத்திலிருந்து தோராயமாக 10 முதல் 12 கிமீ தொலைவில் காசா பகுதி எல்லை அமைந்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பீரி நகரம் சுமார் 8 முதல் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது என்று போர்க்களத்தில் இருந்து பேசிய ஏசியாநெட் சுவர்ணா செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அலட்சியத்தால் நாட்டுக்குள் புகுந்த ஹமாஸ் தாக்குதல் நடத்தியுள்ளனர். எங்களது வாகனம் சென்றபோது, ஒரு ஏவுகணை ஏவப்படும் சத்தம் கேட்டது. காரை நிறுத்தியபோது, மற்றொரு ஏவுகணை வானில் வெடித்ததாக போர் காட்சிகளை விளக்குகிறார் அஜீத்.
மேலும், “அப்பகுதியில் கணிசமான எண்ணிக்கையிலான ராணுவ வாகனங்கள் மற்றும் டேங்கர்கள் உள்ளன. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. ஹமாஸ் போராளிகள் செய்த அட்டூழியங்களுக்குப் பழிவாங்கத் தயாராக ஏராளமான இஸ்ரேலிய வீரர்கள் அங்கு குவிந்துள்ளனர். அழிவுகரமான தாக்குதல்களுக்குப் பிறகு தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பாடுபடும் இஸ்ரேலியர்களின் உறுதியும் விடாமுயற்சியும் உண்மையிலேயே போற்றத்தக்கது.” என்கிறார்.
தொடர்ந்து பேசும் அஜித் ஹனமக்கனவர், ““வறண்ட பாலைவனத்தில் அழகான தேசத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம், ஆனால் நாங்கள் இங்கு வசிக்க அனுமதிக்கப்படவில்லை” என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மாறாக, பாலஸ்தீனியர்கள் இது முதலில் தங்கள் நிலம் என்றும், இஸ்ரேலியர்கள் தங்கள் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் வாதிடுகின்றனர்.
இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல, காசா எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளும் உள்ளனர். அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக கொடூரமான படுகொலைகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர். இழந்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளால் வாடும் இஸ்ரேலியர்கள் பழிவாங்கலுக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.” என்றும் விவரித்துள்ளார்.